பொள்ளாச்சி: கமிஷனுக்கு ஆசைப்பட்டு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வாங்க சென்ற, கோவை தங்க நகை வியாபாரியிடம் ரூ.1 கோடியே 27 லட்சத்தை வழிப்பறி செய்த கும்பலை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து ஆனைமலை போலீஸார் கூறியதாவது: கோவை தெலுங்குபாளையம் மீனாட்சி நகரை சேர்ந்தவர் பிரகாஷ் (44). தங்க நகை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். இவர் வேலை சம்பந்தமாக ஒரு தனியார் வங்கிக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அங்கு வங்கி மேலாளர் ஒருவர் மூலமாக பொள்ளாச்சியை சேர்ந்த குட்டி என்பவர் பிரகாசுக்கு அறிமுகம் ஆகியுள்ளார். குட்டி ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல தொழில் செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை பெற்றுக்கொண்டு 500 ரூபாய் நோட்டுகளை தந்தால், ஒரு கோடி ரூபாய்க்கு ரூ.15 லட்சம் கமிஷன் கிடைக்கும் என பிரகாஷிடம் குட்டி தெரிவித்துள்ளார். அதனை நம்பி ரூ.1 கோடியே 27 லட்சத்து 50 ஆயிரம் தொகையுடன், பிரகாஷ், வங்கி மேலாளர், ஓட்டுநர் ஆகியோர் காரில் பொள்ளாச்சி வந்துள்ளனர்.
குறிப்பிட்ட இடத்தில் வைத்து பிரகாஷ் காரில் குட்டி ஏற, அம்பராம்பாளையம் பகுதிக்கு வந்துள்ளனர். அப்போது அங்கு பெண் உட்பட 5 பேர் நின்று கொண்டிருந்தனர். பிரகாஷிடம் 500 ரூபாய் நோட்டை காண்பிக்க சொல்லி குட்டி கேட்டபோது அவர் காண்பித்துள்ளார். அப்போது குட்டி உட்பட 6 பேர் திடீரென பிரகாஷை தாக்கி அவரிடம் இருந்த பணத்தை பறித்துக்கொண்டு, தயாராக நின்ற மூன்று கார்களில் தப்பி சென்றனர்.
இது குறித்து பிரகாஷ் ஆனைமலை காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 6 பேரும் போலீஸ் பிடியில் சிக்கியுள்ளனர்.வழிப்பறி செய்யப்பட்ட தொகையின் முழு விவரம் விசாரணைக்குப் பின்னர்தான் தெரியவரும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.