விபத்து நடந்த கல்குவாரி. 
க்ரைம்

பல்லடம் அருகே கல்குவாரியில் வெடி விபத்து: வட மாநில தொழிலாளி உயிரிழப்பு; ஒருவர் கவலைக்கிடம்

இரா.கார்த்திகேயன்

திருப்பூர்: பல்லடம் அருகே கோடங்கிபாளையத்தில் கல்குவாரியில் ஏற்பட்ட வெடி விபத்தில், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த தொழிலாளி உயிரிழந்தார். மற்றொருவர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் கோடங்கிபாளையத்தில் ஏராளமான கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் அப்பகுதியில் உள்ள குவாரி ஒன்றில், ஒடிசா மாநிலம் பக்கரா மாவட்டத்தைச் சேர்ந்த பபன்சிங் (46), திருநெல்வேலி மாவட்டம் செண்டமங்கலத்தை சேர்ந்த மதியழகன் (47) ஆகியோர் தொழிலாளர்களாக வேலை செய்து வந்தனர். இன்று அதிகாலை 5 மணிக்கு குவாரியில் வெடி வைப்பதற்காக குழி தோண்டும் பணியில் இருவரும் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஏற்கெனவே வைத்திருந்த வெடி ஒன்று, வெடித்ததில் பபன்சிங் மற்றும் மதியழகன் ஆகியோர் தூக்கி வீசப்பட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த பபன்சிங் உயிரிழந்தார்.

மதியழகனுக்கு பல்லடம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். இது தொடர்பாக ஆலையில் இருந்தவர்கள் அளித்த தகவலின் பேரில், பல்லடம் போலீஸார் வழக்கு பதிந்து பபன்சிங் சடலத்தை கைப்பற்றினர்.

SCROLL FOR NEXT