தருமபுரி: தருமபுரியில் நைட்ரஜன் வாயுவை சுவாசித்து இருவர் தற்கொலை செய்து கொண்ட வழக்கு தொடர்பாக போலீஸார் 2 இளைஞர்களை கைது செய்தனர்.
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் பழைய குவாட்ரஸ் பகுதியைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் பழனிவேல். இவரது மனைவி சாந்தி (56), மகன் விஜய் ஆனந்த் (35). இவர்கள் இருவரும் கடந்த 4-ம் தேதி மாலை வீட்டிலேயே நைட்ரஜன் வாயுவை சுவாசித்து தற்கொலை செய்து கொண்டனர்.
இந்த வழக்கு தொடர்பாக அதியமான்கோட்டை போலீஸார் நடத்திய விசாரணையில், பொறியியல் பட்டதாரியான விஜய் ஆனந்த் நண்பர்களான பள்ளிபாளையத்தைச் சேர்ந்த கார்த்திக், அருண் ஆகியோருடன் இணைந்து ஈரோடு மாவட்டம் நசியனூரில் நூல் மில் ஒன்றை குத்தகைக்கு பெற்று இயக்கி வந்ததும், தொழில் பங்குதாரர்களால் ரூ.25 லட்சம் வரை ஏமாற்றப்பட்டதால் மன உளைச்சலுக்கு உள்ளாகி தாயும், மகனும் தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்தது.
அதேபோல, தற்கொலைக்கு முன்பாக விஜய் ஆனந்த் எழுதி வைத்த, இது தொடர்பான விவரங்கள் அடங்கிய கடிதம் ஒன்றையும் போலீஸார் கைப்பற்றினர். அதன் அடிப்படையில் பள்ளிபாளையத்தைச் சேர்ந்த கார்த்திக், அருண் ஆகிய இருவரிடமும் விசாரணை மேற்கொண்ட போலீஸார் அவர்கள் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.