க்ரைம்

கும்பகோணத்தில் 650 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

சி.எஸ். ஆறுமுகம்

தஞ்சாவூர்: கும்பகோணத்தில் 650 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை காரில் கடத்தி வந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். ரூ. 11 லட்சத்து 60 ஆயிரம் ரொக்கம், 3 இரு சக்கர வாகனம் மற்றும் 2 கார் பறிமுதல் செய்யப்பட்டது.

கர்நாடகா மாநிலம் பெங்களூரிலிருந்து காரில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களைக் கடத்தி வருவதாக, கும்பகோணம் கிழக்கு போலீஸாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் பேரில் டிஎஸ்பி பி,மகேஷ்குமார் தலைமையிலான போலீஸார், அப்பகுதிக்குட்பட்ட பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த போது, சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த காரை மறித்து சோதனையிட்டனர். அதில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது தெரிய வந்தது.

இதனையடுத்து, காரில் வந்தவரிடம் விசாரணை மேற்கொண்ட போது, ராஜஸ்தான் மாநிலம், ஜாலூரைச் சேர்ந்த ஒட்டாராம் மகன் ரமேஷ்குமார் (22) என்பது தெரிய வந்தது.

மேலும், கும்பகோணம், வீணைத்தீர்த்தான் தெருவைச் சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் மகன் தட்சிணாமூர்த்தி (32). உரிமையாளரான இவர், பீடி தயாரிக்கும் தொழில் செய்வதற்காக, சோழபுரம், பிரதான சாலையில் வாடகைக்கு வீடு எடுத்து, தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை பெங்களூரிலிருந்து காரில் கடத்தி வந்து, இங்கு பதுக்கி, நம்பர் இல்லாத இரு சக்கர வாகனத்தில் சில்லறை விற்பனை செய்தது போலீஸாருக்கு விசாரணையில் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து, தட்சிணாமூர்த்தி மற்றும் ரமேஷ்குமார் ஆகிய 2 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த, ரூ. 11 லட்சத்து 60 ஆயிரம் ரொக்கப்பணம், 678 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள், 2 சொகுசு கார்கள், நம்பர் இல்லாத இரு சக்கர வாகனம் உள்பட 3 இரு சக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT