சாந்தி, விஜய் ஆனந்த் 
க்ரைம்

தொழில் பங்குதாரர்கள் ஏமாற்றியதால் விபரீத முடிவு: தருமபுரியில் தாய், மகன் தற்கொலை

செய்திப்பிரிவு

தருமபுரி: தருமபுரி அருகே தொழில் பங்கு தாரர்கள் ஏமாற்றியதால் ஏற்பட்ட மன உளைச்சலால் தாயும், மகனும் நைட்ரஜன் வாயுவை சுவாசித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் பழைய குவாட்ரஸ் கோவிந்தசாமி கவுண்டர் தெருவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் பழனிவேல் (72). இவரது மனைவி சாந்தி (56). இவர்களது மகன் விஜய் ஆனந்த் (35). இவர், பொறியியல் பட்டம் முடித்து விட்டு போட்டித் தேர்வுகள் மூலம் அரசுப் பணிக்கு முயன்றுள்ளார். பின்னர், நண்பர்கள் சிலருடன் இணைந்து ஈரோடு மாவட்டம் நசியனூர் பகுதியில் நூல் மில் ஒன்றை குத்தகைக்கு பெற்று இயக்கி வந்துள்ளார்.

இந்நிலையில், தொழில் பங்குதாரர்கள் விஜய் ஆனந்தை ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது. இதனால், விஜய் ஆனந்த் மற்றும் அவரது தாயார் சாந்தி ஆகியோர் மன உளைச்சலில் இருந்துள்ளனர். பழனிவேலுவுக்கு சொந்தமான விவசாய நிலம் பாலக்கோடு அருகே உள்ளது. அந்த நிலத்தைப் பார்த்துவர நேற்று முன்தினம் பழனிவேல் சென்றுள்ளார்.

மாலையில் அவர் வீடு திரும்பிய போது வீட்டின் கதவு பூட்டப்பட்டு இருந்தது. தன்னிடம் இருந்த சாவி மூலம் வீட்டை திறந்து அவர் உள்ளே சென்றபோது வீட்டினுள் உள்ள ஓர் அறை உட்புறமாக பூட்டப்பட்டு இருந்துள்ளது. மேலும், அந்த அறைக் கதவின் முகப்பில் ஒட்டப்பட்டிருந்த பேப்பரில், 'அறைக்குள் நைட்ரஜன் கேஸ் உள்ளது. எனவே கதவை உடைத்து உள்ளே வரும் முன்பாக காவல்துறைக்கு தகவல் தெரியப்படுத்தி பாதுகாப்புடன் உள்ளே நுழையவும்' என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பழனிவேல் உறவினர் களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். மேலும் அதியமான்கோட்டை காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னர் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது விஜய் ஆனந்த், சாந்தி இருவரும் அறையில் இருந்த சிலிண்டரில் இருந்து குழாயுடன் கூடிய மாஸ்க் மூலம் முகத்துக்கு இணைப்பு ஏற்படுத்தியதுடன், தலையை பாலித்தீன் உறையால் மூடியபடி அசைவற்ற நிலையில் படுத்திருந்தனர். அவர்களை பரிசோதித்த போது இருவரும் உயிரிழந்திருப்பது தெரியவந்தது.

போலீஸாரின் விசாரணையில், தொழில் பங்குதாரர்கள் ஏமாற்றியதால் ரூ.25 லட்சம் பணத்தை இழந்த விஜய் ஆனந்த் மற்றும் அவரது தாய் சாந்தி கடும் மன உளைச்சலில் இருந்துள்ளனர். இதனால் இருவரும் தற்கொலை செய்ய முடிவெடுத்து, அது தொடர்பாக ஆன்லைன் மூலம் தகவல் திரட்டி, 2 நைட்ரஜன் கேஸ் சிலிண்டர்களை விலைக்கு வாங்கியுள்ளனர். பழனிவேல் வெளியில் சென்ற சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தாயும், மகனும் தற்கொலை செய்துள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.

மேலும், தன்னை ஏமாற்றிய தொழில் பங்குதாரர்கள் சிலரின் பெயரைக் குறிப்பிட்டு விஜய் ஆனந்த் எழுதி வைத்திருந்த கடிதத்தையும் போலீஸார் கைப்பற்றியுள்ளனர். அதன் அடிப்படையில் சிலரை பிடித்து அதியமான்கோட்டை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தற்கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

SCROLL FOR NEXT