க்ரைம்

காஞ்சிபுரம் அருகே கார் டயர் வெடித்து 3 குழந்தைகள் உள்பட 5 பேர் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த சித்தேரிமேடு பகுதியில் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் திருவண்ணாமலை நோக்கி சென்ற கார், டயர் வெடித்து சாலையோரம் நின்றிருந்த லாரியின் மீது மோதிய விபத்தில் 3 குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்தார்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுகா சே.நாச்சியார் பட்டு பகுதியை சேர்ந்தவர் ராமஜெயம். கார் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ரத்தினா. இத்தம்பதியருக்கு ராஜலட்சுமி (5), தேஜா ஸ்ரீ (2) மற்றும் 3 மாத ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், 3 மாத ஆண் குழந்தை மற்றும் பெண் பிள்ளைகளுடன் சென்னையிலுள்ள தனது அம்மா வீட்டில் ரத்தினா இருந்துள்ளார்.

இதனால், மனைவி மற்றும் குழந்தைகளை வீட்டுக்கு அழைத்து செல்வதற்காக ராமஜெயம் சென்னை சென்றார். பின்னர், குடும்பத்தினரையும் மற்றும் உறவினர் ராஜேஷ் (29) என்பவரை அழைத்துக்கொண்டு நேற்று முன்தினம் இரவு, சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் திருவண்ணாமலை நோக்கி காரில் சென்றுள்ளார்.

அப்போது, காஞ்சிபுரம் அருகே சித்தேரிமேடு கிராமப் பகுதியில் வந்தபோது, காரின் டயர் வெடித்ததாக கூறப்படுகிறது. இதில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் நின்றிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், ரத்தினா மற்றும் 2 பெண் குழந்தைகள், உறவினர் ராஜேஷ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தகவல் அறிந்த பாலுசெட்டி சத்திரம் போலீஸார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். காயடைமந்த ராமஜெயம் மற்றும் 3 மாத ஆண் குழந்தையை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும், 3 மாத குழந்தை மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

விபத்து குறித்து, பாலு செட்டிசத்திரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தால் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 குழந்தைகள் உள்பட 5 பேர் உயிரிழந்த சம்பவம் அவர்களது சொந்த கிராமப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

SCROLL FOR NEXT