க்ரைம்

வாலாஜா அருகே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 35 பேர் கைது

செய்திப்பிரிவு

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட லாலாப்பேட்டையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்த நாளையொட்டி, லாலாப் பேட்டை பேருந்து நிறுத்தம் அருகே கொடியேற்றம் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது.

இதில், முகுந்தராயபுரம் ஊராட்சி மன்றத்தலைவரும், வாலாஜா மேற்கு ஒன்றிய திமுக செயலாளருமான அக்ராவரம் முருகன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். அப்போது, லாலாப்பேட்டை ஊராட்சி மன்றத் தலைவர் கோகுலன் மற்றும் திமுக நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் அங்கு வந்தனர். அப்போது, இருதரப்பினருக்குமிடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டது.

லாலாப்பேட்டையைச் சேர்ந்தவர்கள் பொன்னை செல்லும் சாலையில், 100-க்கும் மேற்பட்டவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். முகுந்தராயபுரத்தைச் சேர்ந்தவர்கள் அக்ராவரம் பேருந்து நிறுத்தத்திலும் சாலை மறியலில் ஈடுபட முயற்சி செய்தனர். தொடர்ந்து, அங்கு வந்த காவல்துறையினர் மற்றும் வருவாய்துறையினரும் இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதையடுத்து, இருதரப் பினரும் சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்த புகார் குறித்து காவல் துறையினர் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து முகுந்தராயபுரத்தைச் சேர்ந்த 17 பேர் மற்றும் லாலாப்பேட்டையைச் சேர்ந்த 18 பேர் என மொத்தம் 35 பேரை காவல் துறையினர் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

SCROLL FOR NEXT