கோவை: கோவை அருகே விளம்பர பேனர் விழுந்து 3 பேர் உயிரிழந்த விவகாரத்தில், துணை ஒப்பந்ததாரர் உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவை-அவிநாசி சாலையில், கருமத்தம்பட்டி வடுகபாளையம் பிரிவு அருகே நேற்று முன்தினம் மாலை, ராமசாமி என்பவரது தோட்டத்தில், 80 அடி உயர சாரத்தில் விளம்பர பேனர் பொருத்தும் பணி நடைபெற்றது. அப்போது, பலத்த காற்று வீசியதால், இரும்பு சாரம் சரிந்து விழுந்து விபத்து நேரிட்டது.
இதில், சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தைச் சேர்ந்த செந்தில் முருகன்(38), பொன்னம்மாபேட்டை குமார்(52), சுப்பிரமணிய பாரதியார் வீதி குணசேகர்(52) ஆகியோர் உயிரிழந்தனர். சேட்டு (23) என்பவர் பலத்த காயமடைந்தார். இது தொடர்பாக கருமத்தம்பட்டி போலீஸார் விசாரணை நடத்தினர்.
பின்னர், ஒப்பந்ததாரர் சேலம் பாலாஜி, துணை ஒப்பந்ததாரர் பழனிசாமி(56), தோட்ட உரிமையாளர் ராமசாமி(72), ஒப்பந்த நிறுவன மேலாளர் அருண்குமார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
முதல்கட்ட விசாரணையில், உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றாமல் பேனர் பொருத்தும் பணி நடைபெற்றதும், சாரம் முறையாகப் பராமரிக்கப்படாமல் இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, துணை ஒப்பந்ததாரர் பழனிசாமி, ஒப்பந்த நிறுவனமேலாளர் அருண்குமார் ஆகியோரைக் கைது செய்த போலீஸார், மற்ற 2 பேரையும் தேடி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸார் கூறும்போது, ‘‘இந்த விவகாரத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்று விசாரித்து வருகிறோம்.
மேலும், மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடன், அனுமதியற்ற விளம்பரப் பதாகைகளை அகற்றும் பணியிலும் ஈடுபட்டு வருகிறோம்’’ என்றனர்.