சென்னை: தி.நகரில் உள்ள பிரபல நகைக் கடையில் இரண்டரை கிலோ தங்கக் கட்டி கையாடல் செய்யப்பட்டது தொடர்பாக ஊழியர் உள்ளிட்ட 2 பேர் மீதுபோலீஸார் வழக்குப் பதிவுசெய்து, விசாரித்து வருகின்றனர்.
சென்னை தி.நகர் உஸ்மான் சாலையில் உள்ள பிரபல நகைக்கடை சார்பில் மாம்பலம்காவல் நிலையத்தில் அண்மையில் புகார் அளிக்கப்பட்டது.
அதில், ``எங்கள் நகைக்கடையில் ஒப்பந்த அடிப்படையில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக, நந்தனம் பிரபீர் ஷேக் (38) என்பவர் நகைகளை செய்து கொடுக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். இவரிடம் அண்மையில் நகைகளை செய்வதற்காக 2 கிலோ 46 கிராம் 10 மில்லி எடை கொண்ட தங்கக் கட்டி கொடுக்கப்பட்டது.
அதைப் பெற்றுக் கொண்ட பிரபீர் மற்றும் அவரது நண்பர்தி.நகர் நடேசன் தெரு பாலமுருகன் (41) ஆகியோர் நகைகளை செய்து கொடுக்காமல், அவற்றைக் கையாடல் செய்துவிட்டனர்.எனவே, இருவர் மீதும் நடவடிக்கை மேற்கொண்டு, தங்கக்கட்டியை மீட்டுத் தருமாறு கேட்டுக் கொள்கிறோம்'' என குறிப்பிடப்பட்டிருந்தது.
இது தொடர்பாக மாம்பலம் காவல் நிலைய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தினர். இதில், இருவர் மீதும் அளிக்கப்பட்ட புகார் உண்மை என்று தெரியவந்தது. இதையடுத்து, பிரபீர் ஷேக், பாலமுருகன் ஆகியோர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.