கைது செய்யப்பட்டவர்கள் 
க்ரைம்

தஞ்சை | வாக்கி டாக்கி மூலம் தகவல் பறிமாறி மதுபானம் விற்பனை செய்த 6 பேர் கைது

சி.எஸ். ஆறுமுகம்

தஞ்சாவூர்: திருவிடைமருதூர் வட்டம், திருப்பனந்தாளில் வாக்கி டாக்கிகள் மூலம் தகவல் அளித்து, டாஸ்மாக் மதுபானம் விற்பனை செய்த 6 பேரை போலீஸார் கைது செய்து அவர்களிடமிருந்து 3 வாக்கி டாக்கிகள், 2 இரு சக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்துள்ளனர்.

திருப்பனந்தாள் பகுதியில் இரவு 10 மணி முதல் மதியம் 12 மணி வரை அனுமதியின்றி டாஸ்மாக் மதுபானம் விற்பனை செய்து வருவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து, போலீஸார் விற்பனை செய்யும் இடத்திற்குச் செல்லும்போது, அவர்கள் தப்பியோடி வந்தனர். இதனையடுத்து போலீஸார், இது குறித்து மேலும் விசாரணை செய்த போது, அவர்கள் குழுவாக வாக்கி டாக்கிகள் மூலம் போலீஸார் தகவலறிந்து வருவதை தெரிவித்து மதுபானத்தை விற்பனை செய்தும், தப்பியோடி வந்ததும் தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து, டிஎஸ்பி ஒய். ஜாபர்சித்திக் தலைமையில் போலீஸார், நேற்று ரகசிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, போலீஸார் நடமாட்டத்தை, அங்கிருந்த ஒருவர், சிறுவர்கள் விளையாடும் வாக்கி டாக்கி மூலம் அருகிலுள்ளவருக்கு தகவல் அளிப்பதும், தொடர்ந்து அவர்களுக்குள் ஒருவருக்கொருவர் தகவல் பறிமாறிக்கொண்டதும் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து, போலீஸார் அவர்களைக் கண்காணித்துச் சென்றபோது, திருப்பனந்தாள், மண்ணியாற்றின் அருகில் பதுங்கியிருப்பது தெரிய வந்தது.

பின்னர் அங்கிருந்த அதே பகுதியைச் சேர்ந்த சச்சுவாணன் (26), கணேசன்(46), ஆறுமுகம் (30), சேகர்(63), சசிகுமார் (40), ரவி (55) ஆகிய 6 பேரை போலீஸார் கைது செய்து, அவர்கள் பயன்படுத்திய 3 வாக்கி டாக்கிகள், 2 இரு சக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT