ஒபியே லு பீட்ட ர், யூசுப்ஒலாலேகான், ஒல்யூபூபே ஜேம்ஸ். 
க்ரைம்

டைல்ஸ் நிறுவன வங்கி கணக்கை முடக்கி ரூ.17 லட்சம் திருடிய நைஜீரிய கொள்ளையர்கள்: பெங்களூரு சென்று கைது செய்த சென்னை போலீஸார்

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை ஆயிரம் விளக்கில் டைல்ஸ் நிறுவனம் ஒன்று செயல்படுகிறது. இந்த நிறுவனம் சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அண்மையில் புகார் ஒன்று அளிக்கப்பட்டது. அதில், ``எங்கள் நிறுவன வங்கிக் கணக்கோடு இணைக்கப்பட்டு இருந்த செல்போன் எண் முடக்கப்பட்டு, வங்கிக் கணக்கிலிருந்த ரூ.17 லட்சத்து 30 ஆயிரத்தை சைபர் கொள்ளையர்கள் திருடிவிட்டனர். எனவே,எங்களது பணத்தை மீட்டு, அதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளைக் கைது செய்யவேண்டும்'' என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுகுறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள சைபர் க்ரைம் காவல் ஆய்வாளர் வினோத் குமார் தலைமையிலான தனிப்படை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.

இதில், டைல்ஸ் நிறுவன வங்கி தகவல்கள் பெங்களூருவில் இருந்து சைபர்குற்றவாளிகளால், ஹேக் செய்யப்பட்டதும், பின்னர் வங்கிக் கணக்கோடு தொடர்புடைய செல்போன் எண்ணை முடக்கி (பிளாக்), அதே செல்போன் எண்ணில் புது சிம் கார்டை பெற்றுள்ளதும், வங்கிப் பரிவர்த்தனையின் போது பெறப்படும் ஓடிபி (OTP) எண்களை புது சிம் கார்டு நம்பரில் பெற்று பணத்தைத் திருடியிருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, ஆய்வாளர் வினோத் குமார் தலைமையிலான தனிப்படை போலீஸார் பெங்களூரு விரைந்து அங்குப் பதுங்கியிருந்த நைஜீரியா நாட்டைச் சேர்ந்த யூசுப்ஒலாலேகான் (30), ஒபியேலு பீட்டர் (41), ஒல்யூபூபே ஜேம்ஸ் (25) ஆகிய 3 பேரை நேற்று முன்தினம் கைது செய்தனர். பின்னர், அவர்களைச் சென்னை அழைத்து வந்து இங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கைதானவர்களிடமிருந்து 2 லேப்டாப்கள், 9 செல்போன்கள், 14 சிம் கார்டுகள், 12 டெபிட் கார்டுகள் கைப்பற்றப்பட்டன. தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

SCROLL FOR NEXT