க்ரைம்

மன்னார்குடியில் ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 10 பேர் கைது

காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

சி.கோபாலகிருஷ்ணன்

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர். லாட்டரி விற்பனையை தடுக்கத் தவறியதாக காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

திருவாரூர் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட சட்டவிரோத லாட்டரி விற்பனையை தடுக்கவும், அவற்றின் நடமாட்டத்தை முற்றிலும் கட்டுப்படுத்தவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சதீஷ்குமார் உத்தரவின்படி தனிப்படை அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில், மன்னார்குடி நகர காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில், சட்டவிரோதமாக ஆன்லைன் லாட்டரி விற்பனை நடைபெறுவதாக தனிப்படை போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், சோதனையில் ஈடுபட்டபோது மன்னார்குடி நகர் பகுதியில் சட்டவிரோதமாக ஆன்லைன் லாட்டரி விற்பனை நடைபெற்று வருவது தெரியவந்தது.

இதனிடையே, ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டதாக புதூர் பகுதியைச் சேர்ந்த முருகேசன், மன்னார்குடி மேலவாசல் பகுதியைச் சேர்ந்த பரமசிவம், குறிஞ்சி நகர் பகுதியைச் சேர்ந்த சத்தியமூர்த்தி, மற்றும் கார்த்திகேயன், நெடுவாக்கோட்டை பகுதியைச் சேர்ந்த அருளானந்தம், ருக்மணி, குளம் பகுதியைச் சேர்ந்த ஐயப்பன், சசி, அன்புக்கரசு, சுரேஷ் உள்ளிட்ட 10 நபர்களை தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.

மேலும், அவர்களிடம் இருந்த இரண்டு மடிக்கணினி, ஒரு ஐபோன், 12 ஆண்ட்ராய்டு செல்போன், நான்கு ஆட்டோ, நான்கு இருசக்கர வாகனம் மற்றும் 63 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றையும் தனிப்படை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து, லாட்டரி விற்பனையை தடுக்க தவறியதாக கூறி மன்னார்குடி நகர காவல் ஆய்வாளர் ராஜ் கமலை நேற்று இரவு காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி தஞ்சை சரக டிஐஜி ஜியா உல்ஹக் உத்தரவிட்டுள்ளார். சிறப்பாக செயல்பட்டு சட்டவிரோத லாட்டரி விற்பனையில் ஈடுபட்டவர்களை கைது செய்த தனிப்படை காவல்துறையினரை எஸ்.பி சதீஷ்குமார் வெகுவாகப் பாராட்டினர்.

SCROLL FOR NEXT