புதுடெல்லி: நாடு முழுவதும் 24 மணி நேரத்தில் 10,112 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக நாட்டில் தினசரி கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதை தடுக்க மாநில அரசுகளுக்கு மீண்டும் பழைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படி மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.மேலும், தடுப்பூசி தயாரிக்கும் பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன. மத்திய சுகாதார அமைச்சக இணையதளத்தில் நேற்று காலை 8 மணிக்கு கரோனா தொற்று தொடர்பாக வெளியிடப்பட்ட புள்ளிவிவரத்தில் கூறியிருப்பதாவது:
கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 10,112 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தோரில் மேலும் 29 பேர் உயிரிழந்தனர். இதனால் கரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,31,329 ஆக அதிகரித்துள்ளது.
கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 67,806 ஆக உயர்ந்துள்ளது. இது இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோரில் 0.15% ஆகும். குணமடைந்தோர் விகிதம் 98.66% ஆக உள்ளது.
கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவோரில் தொற்று உறுதி செய்யப்படுவோரின் தினசரி விகிதம் 7.03% ஆகவும் வாராந்திர விகிதம் 5.43% ஆகவும் உள்ளது. நாடு முழுவதும் இதுவரை 220.66 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.