கரோனா வைரஸ்

கரோனாவுக்கு பிந்தைய உடல்நல பாதிப்புகள் குறித்து நாடு முழுவதும் மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வு

செய்திப்பிரிவு

சென்னை: நாடு முழுவதும் கரோனா தொற்றில் இருந்து குணமடைந்து ஓராண்டை கடந்தவர்களுக்கு ஏற்படும் உடல்நல பாதிப்புகள் குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வு நடத்த உள்ளது.

இந்தியாவில் கடந்த 2020 ஜனவரி மாதம் பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தொற்றால் 4.47 கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 4.41 கோடிக்கும் அதிகமானோர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். தொற்றின் தீவிரத்தாலும், இணை நோய் பாதிப்புகளாலும் 5 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் 2020 மார்ச் மாதம் கரோனா தொற்று பரவத் தொடங்கியது. இதுவரை 35.98 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 35.58 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தொற்றில் இருந்து குணமடைந்த நிலையில், 38,050 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில், குறைந்து வந்த தொற்று பாதிப்பு மீண்டும் நாடு முழுவதும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதற்கிடையே, கரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களுக்கு மாரடைப்பு, இதய, சிறுநீரக பிரச்சினைகள், மன அழுத்தம், தூக்கமின்மை போன்ற பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக, இளம் வயதில் மாரடைப்பு ஏற்படுவது அதிகரித்துள்ளது.

இதைத் தொடர்ந்து, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவுறுத்தலின்படி, நாடு முழுவதும் கரோனா தொற்றில் இருந்து குணமடைந்து ஓராண்டை கடந்தவர்களுக்கு ஏற்படும் உடல்நல பாதிப்புகள் குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) ஆய்வு நடத்த உள்ளது.

இதுகுறித்து தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வ விநாயகத்திடம் கேட்டபோது, “எந்த ஒரு குறிப்பிட்ட உடல்நல பாதிப்பையும் மட்டும்சார்ந்ததாக இல்லாமல், அனைத்துபிரச்சினைகளையும் சார்ந்ததாகவே இந்த ஆய்வு இருக்கும். இந்த ஆய்வை ஐசிஎம்ஆர் இன்னும் தொடங்கவில்லை. ஒருவேளை, இதில் தாமதம் ஏற்பட்டால், தமிழகத்தில் அத்தகைய ஆய்வை நடத்த தமிழக சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது” என்றார்.

SCROLL FOR NEXT