சென்னை: தமிழகத்தில் இன்று ஆண்கள் 1,532 பெண்கள் 1,130 என மொத்தம் 2,662 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 1060 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 34 லட்சத்து 88,091 ஆக அதிகரித்துள்ளது. நீண்ட நாட்களுக்குப் பிறகு கொரோனா உயிரிழப்பு பதிவாகியுள்ளது.
உயிரிழந்தவர் விவரம்: கடந்த மாதம் 28-ம் தேதி அன்று கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சென்னையைச் சேர்ந்த 77 வயதுப் பெண் ஒருவர்,ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் பாதிப்புடன் 29-ம் தேதி ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல், இருமல், சுவாசிப்பதில் சிக்கல் உள்ளிட்ட பாதிப்புகளுடன் சிகிச்சைப்பெற்று வந்தவர், கடந்த 3-ம் தேதி மாலை 4 மணி அளவில் சுவாச செயலிழப்பு மற்றும் கரோனா காரணமாக உயிரிழந்தார்.
இதுவரை 34 லட்சத்து 33,299 பேர் குணமடைந்துள்ளனர். இன்று மட்டும் 1,512 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர். இன்று நோய்த்தொற்று பாதிப்பால் ஒருவர் உயிரிழந்தார் . தற்போது மாநிலம் முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டோர் உள்பட சிகிச்சைப் பெற்று வருவோரின் எண்ணிக்கை 16,765 ஆக உள்ளது.
தமிழகத்தில் நேற்று கரோனா தொற்று பாதிப்பு 2,654 ஆகவும், சென்னையில் 1066 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த சில வாரங்களாக கரோனா பாதிப்பு தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. தொற்று பாதிப்பு சென்னையில் மட்டும் கடந்த சில நாட்களாக 1000-ஐ கடந்துள்ளது.
முன்னதாக, இன்று காலை நேர நிலவரப்படி இந்தியாவில் புதிதாக 13,086 பேர் கரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 12,456 பேர் கடந்ந 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தமாக நாட்டில் 198.09 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்
பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் 500 ரூபாய் அபராதம் விதிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் கரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்தும், சென்னையில் தினசரி கரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியும் பதிவாகிவரும் நிலையில், தொற்றுப் பாதிப்பை கட்டுப்படுத்தும் விதமாக முதல் கட்டமாக இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.