கரோனா வைரஸ்

பெங்களூருவில் பள்ளி மாணவர்கள் 31 பேருக்கு கரோனா

செய்திப்பிரிவு

பெங்களூரு: கர்நாடகாவில் நேற்று புதிதாக 833 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், பெங்களூருவில் உள்ள தாசரஹள்ளி பகுதியை சேர்ந்த 2 தனியார் பள்ளிகளை சேர்ந்த 56 பேருக்கு நேற்று முன்தினம் திடீரென சளி, இருமல், காய்ச்சல் ஏற்பட்டது. அவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொண்டதில் 31 பேருக்கு தொற்று உறுதியானது.

இதையடுத்து 31 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு, மருத்துவமனையில் முதல்கட்ட சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 31 மாணவர்களின் உடல்நிலையும் சீராக இருப்பதால் ஓய்வுக்காக வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். இந்த மாணவர்களுடன் தொடர்பில் இருந்த மாணவர்கள், ஆசிரியர்கள், பள்ளி ஊழியர்கள் உட்பட 400-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

2 பள்ளிகளை மூட உத்தரவு

இந்த சம்பவத்தை தொடர்ந்து பெங்களூரு மாநகராட்சி சுகாதாரத்துறை ஆணையர் ரந்தீப் தலைமையிலான அதிகாரிகள் 2 பள்ளிகளையும் பார்வையிட்டனர். அடுத்த 7 நாட்களுக்கு 2 பள்ளிகளையும் மூட உத்தரவிட்டனர்.

இதனிடையே, பெங்களூரு மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''பள்ளியில் மாணவர்களும் ஆசிரியர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். வகுப்பறையில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். பள்ளி வளாகத்தில் நாள்தோறும் கிருமி நாசினி தெளிக்க வேண்டும்'' என வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.

SCROLL FOR NEXT