கரோனா வைரஸ்

சென்னை அண்ணா பல்கலை.யில் 6 பேருக்கு கரோனா: ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 6 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார்.

சென்னை ஐ.ஐ.டி.யில் வெளிமாநிலங்களில் இருந்து வந்த மாணவர்களால் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கரோனா பரவத் தொடங்கியது. இதையடுத்து, ஐ.ஐ.டி. வளாகத்தில் உள்ள விடுதிகள் மற்றும் அலுவலகங்களில் உள்ள மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் பல்கலைக்கழக ஊழியர்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இந்தப் பரிசோதனை முடிவில் 198 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டு, பாதிக்கப்பட்ட அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், நேற்று சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்திலும் 6 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர்களுடன் தொடர்பில் இருந்த அனைவருக்கும் மருத்துவப் பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிலருக்கு கரோனா அறிகுறிகள் ஏற்பட்டது. இதையடுத்து அவர்களுடன் தொடர்பில் இருந்த 40 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளபட்டது. அதில்தான் 6 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

இந்த நிலையில், அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக சிறப்பு மருத்துவக் குழு அங்கு அமைக்கப்பட்டுள்ளது. கரோனா கண்டறியப்படும் அனைவருக்கும் சிகிச்சை அளிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நோய்த் தொற்று பரவிய அண்ணா பல்கலைக்கழக வளாகத்தை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

SCROLL FOR NEXT