கரோனா வைரஸ்

கோவாவாக்ஸ் தடுப்பூசி விலை ரூ.900-ல் இருந்து ரூ.225 ஆக குறைப்பு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: சிறார்களுக்கான கோவாவாக்ஸ் தடுப்பூசியின் விலையை சீரம் நிறுவனம் ரூ.900-லிருந்து ரூ.225 ஆகக் குறைத்துள்ளது.

மகாராஷ்டிராவின் புனே நகரில் அமைந்துள்ள சீரம் நிறுவனம், கோவிஷீல்டு என்ற பெயரில் கரோனா தடுப்பூசியை தயாரிக்கிறது.

இது 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு செலுத்தப்படுகிறது. இந்நிறுவனம் சார்பில் தற்போது 12 முதல் 17 வயது வரையிலான சிறார்களுக்காக கோவாவாக்ஸ் தடுப்பூசி தயாரிக்கப்படுகிறது. இந்த தடுப்பூசிக்கு மத்திய அரசு அண்மையில் அனுமதி வழங்கியது.

இதையடுத்து, மத்திய அரசு கரோனா தடுப்பூசி திட்டத்துக்காக தொடங்கியுள்ள கோவின் இணையதளத்தில் கோவாவாக்ஸ் கடந்த 2-ம் தேதி சேர்க்கப்பட்டது. இதனிடையே, கோவாவாக்ஸ் தடுப்பூசி இந்திய சந்தையில் விற்பனைக்கு கிடைக்கும் என சீரம் நிறுவன தலைவர் அதார் பூனவாலா நேற்று முன்தினம் ட்விட்டரில் தெரிவித்தார்.

சேவைக் கட்டணம்

இந்நிலையில், தனியார் மருத்துவமனைகளுக்கு கோவாவாக்ஸ் மருந்தின் விலையை ரூ.900-லிருந்து ரூ.225 (ஜிஎஸ்டி தனி) ஆக குறைத்துள்ளதாக சீரம் நிறுவன உயர் அதிகாரி பிரகாஷ் குமார் சிங் தெரிவித்துள்ளார். மேலும் மருந்து விலையுடன் சேவைக் கட்டணமாக ரூ.150 வசூலிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இப்போது 12 முதல் 14 வயதுக்குட்பட்டோருக்கு பயலாஜிகல் இ நிறுவனத்தின் கார்ப்வேக்ஸும் 15 முதல் 18 வயதுக்குட்பட்டோருக்கு பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சினும் அரசு முகாம்களில் இலவசமாக செலுத்தப்படுகிறது. தனியார் மருத்துவமனைகளில் கோவாக்சின் ரூ.386-க்கும் கார்ப்வேக்ஸ் ரூ.990-க்கும் (ஜிஎஸ்டி உட்பட) செலுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT