ஊரடங்கை தொடர்ந்து நேற்று இரவு முதல் புதுச்சேரியில் உள்ள நான்கு பிராந்தியங்களிலும் 144 தடை உத்தரவு நடைமுறைக்கு வந்தது. மாநிலம் விட்டு மாநிலம் செல்லும் வாகனங்களுக்கு புதுச்சேரியில் நுழைய அனுமதியில்லை. இரு சக்கர வாகனங்களுக்கு அனுமதி தரப்படுகிறது.
கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நேற்று இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து, இன்று (மார்ச் 23) முதல் வரும் 31 வரை 144 தடை உத்தரவு புதுச்சேரியில் உள்ள 4 பிராந்தியங்களிலும் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஊரடங்கு முடிந்தவுடன் 144 தடை உத்தரவு புதுச்சேரி, காரைக்காலில் அமலுக்கு வந்தது. ஏற்கெனவே மாஹே, ஏனாம் பிராந்தியங்களில் 144 தடை உத்தரவு உள்ளது.
புதுச்சேரியை ஒட்டி தமிழக பகுதிகள் உள்ளன. அதுதொடர்பாக, முதல்வர் நாராயணசாமியிடம் கேட்டதற்கு, "வெளிமாநில நான்கு சக்கர வானகங்கள் இன்று முதல் நுழைய தடை விதிக்கப்படுகிறது. வரும் 31 வரை நடைமுறையில் இருக்கும்.
ஆனால், இன்ட்ரா ஸ்டேட் பர்மிட் உள்ள வாகனங்கள், புதுச்சேரி யூனியன் பிரதேசம் முழுவதும் அதாவது, புதுச்சேரியில் இருந்து பாகூர், நெட்டப்பாக்கம், மதகடிப்பட்டு, திருக்கனூர், காலாப்பட்டு ஆகிய பகுதிகளுக்கும், காரைக்காலில் இருந்து அம்பகரத்தூர், விழுதியூர் போன்ற பகுதிகளுக்கும் செல்லலாம். மாநிலம் விட்டு மாநிலம் செல்லும் வாகனங்களுக்கு புதுச்சேரி யூனியன் பிரதேச எல்லைக்குள் நுழைய அனுமதி இல்லை.
அரசு வாகனங்களுக்கும், அத்தியாவசிய பொருட்களான பால், உணவுப்பொருள், காய்கறி, மளிகை பொருட்கள், மருந்து, மருத்துவ சாதன பொருட்கள் கொண்டு வரும் வாகனங்களுக்கும் இத்தடையில் இருந்து விலக்கு தரப்படுகிறது. தடை உத்தரவு இரு சக்கர வாகனங்களுக்கு பொருந்தாது.
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உணவு விடுதிகள் உள்ளிட்ட கடைகளை திறக்கலாம். அங்கு பொதுமக்கள் செல்ல எந்தவித தடையும் இல்லை. போதிய பாதுகாப்புடன் இடைவெளிவிட்டு செயல்படுவது அவசியம்" என்று தெரிவித்தார்.
துணைநிலை ஆளுநர் கிரண்பேடி வெளியிட்டுள்ள வீடியோவில், "ஊரடங்கு நிறைவடைந்துள்ளது. மக்கள் உடனடியாக ஷாப்பிங் செல்வதைத் தவிர்க்க வேண்டும். இது ஷாப்பிங் செல்வதற்கான காலம் அல்ல. தேவையானதற்கு மட்டுமே வெளியே செல்ல வேண்டும். வெளியிலும் போதிய இடைவெளியுடன் பாதுகாப்புடன் செயல்பட்டால் கரோனா வைரஸை அகற்ற முடியும். தேவையின்றி பொது இடங்களில் கூடுவதை தவிருங்கள்" என்று தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மாநில எல்லைகளில் தடுப்புகளை அமைத்து வெளி மாநிலத்தில் இருந்து வரும் வாகனங்களை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்புகின்றனர்.
கரோனா வைரஸ் எதிரொலி காரணமாக இந்தியா முழுவதும் ரயில் சேவை வருகிற 31-ம் தேதி வரை ரத்து செய்யபட்டுள்ளது. இதனால், பொதுமக்கள், பயணிகள் உள்ளே வரக்கூடாது என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரி ரயில் நிலையம் மூடப்பட்டுள்ளது.