கரோனா வைரஸ்

கரோனா வைரஸ் உத்தரவுகளை மாநில அரசுகள் பின்பற்றுவதை உறுதி செய்க: பிரதமர் மோடி அறிவுறுத்தல்

செய்திப்பிரிவு

மாவட்டங்கள் முடக்கத்தை நிறைய மக்கள் தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ள 75 மாவட்டங்களில் வரும் 31-ம் தேதி வரை அத்தியாவசியமற்ற சேவைகளை முடக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

டெல்லி, மும்பை, புனே, நாக்பூர், பெங்களூரு, மைசூரு, ஹைதராபாத், கொல்கத்தா, லக்னோ, ஆக்ரா, ஜபல்பூர், திரு வனந்தபுரம், எர்ணாகுளம், திருச்சூர், அகமதாபாத், வடோதரா, குர்கான், பரிதாபாத், சண்டிகர், விசாகப் பட்டினம், விஜயவாடா உட்பட 75 மாவட்டங்களில் திரையரங்குகள், வணிக வளாகங்கள் கல்வி நிறுவனங்கள், உணவகங்கள் உட்பட அனைத்து கடைகளும் வரும் 31-ம் தேதி வரை மூடப்பட்டிருக்கும். எனினும் பால், மருத்துவ சேவைகள், காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் தமிழகத்தின் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்கள் முடக்கப்பட்டுள்ளன. முன்னதாக வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்த மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜிவ் கவுபா மற்றும் மற்றும் பிரதமரின் முதன்மைச் செயலாளர் பி.கே.மிஸ்ரா ஆகியோர் அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுடன் காணொலிக் காட்சி மூலம் நேற்று கலந்துரையாடினர். இந்த உயர்மட்டக் கூட்டத்தில் லாக் டவுன் முடிவு எடுக்கப்பட்டது.

இந்நிலையில், மாவட்டங்கள் முடக்கத்தை நிறைய மக்கள் தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ''நிறைய மக்கள், மாவட்டங்கள் முடக்கப்பட்டுள்ளதைத் தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை. தயவுசெய்து உங்களைக் காத்துக் கொள்ளுங்கள், உங்களின் குடும்பத்தையும் காப்பாற்றுங்கள். அரசின் உத்தரவுகளை முறையாகப் பின்பற்றுங்கள்.

இதுதொடர்பாக உத்தரவுகளும் அறிவுறுத்தல்களும் பின்பற்றப்படுவதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்'' என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT