கரோனா வைரஸ்

கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்த எங்களுடன் இணைந்ததிற்கு நன்றி சூர்யா: அமைச்சர் விஜயபாஸ்கர்

செய்திப்பிரிவு

கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்த எங்களுடன் இணைந்ததிற்கு நன்றி சூர்யா என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. பொதுமக்கள் அனைவருமே வீட்டிற்குள்ளேயே இருக்க தமிழக அரசு அறிவுறுத்தி வருகிறது. இதனை பல்வேறு திரையுலக பிரபலங்கள் தங்களுடைய ட்விட்டர் தளத்தில் கூறி வருகிறார்கள்.

கரோனா வைரஸ் தொடர்பாக சூர்யா தனது ட்விட்டர் பதிவில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் “கரோனா வைரஸ். நாம் நினைத்ததை விட ரொம்ப வேகமாகவே பரவிக் கொண்டிருக்கிறது. நம்ம பரப்ப வேண்டிய ஒரே விஷயம் விழிப்புணர்வு மட்டுமே. வெள்ளம், புயல் ஜல்லிக்கட்டு என்று ரோட்டில் இறங்கிப் போராடிய நாம் இப்போது வீட்டிற்குள் இருந்தே போராட வேண்டும். சீனாவை விட இத்தாலியில் அதிகமான உயிரிழப்பு நடந்ததற்குக் காரணம், அறியாமையில் வெளியில் சுற்றிய அப்பாவி மக்கள்தான். இந்தியா இன்னொரு இத்தாலியாகி விடக்கூடாது.

10 நாளில் 150 ஆக இருந்த பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த 24 மணிநேரங்களில் 250 ஏறியிருக்கிறது. பாதிக்கப்படுவார்களின் எண்ணிக்கை ஏறிக் கொண்டே இருப்பதால் மருத்துவர்களும், அரசு அதிகாரிகளும் வருத்தப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட ஒருத்தர் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளாமல், ரயிலிலோ, பொது நிகழ்ச்சிக்கோ போனால் அவரைச் சுற்றி இருக்கும் அத்தனை பேருமே பாதிக்கப்படுவார்கள். அப்படி ஒரு தவறை நீங்கள் செய்ய மாட்டீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்று குறிப்பிட்டு இருந்தார் சூர்யா.

இந்த வீடியோ பதிவுக்கு தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நன்றி தெரிவித்துள்ளார். சூர்யாவின் ட்விட்டர் வீடியோவுக்கு பதிலளிக்கும் விதமாகத் தனது ட்விட்டர் பதிவில் அமைச்சர் விஜயபாஸ்கர், "நாம் பேசினோம். என்னுடைய வேண்டுகோளை ஏற்றுக்கொண்டதற்கு நன்றி சூர்யா. உங்களுடைய இடைவிடாத பணிகளுக்கு இடையே இந்த வீடியோவை உருவாக்கி விழிப்புணர்வு ஏற்படுத்த எங்களுடன் இணைந்துள்ளீர்கள். பொதுமக்களின் விழிப்புணர்வுக்காக விரைவில் திரையிடப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT