வல்லரசு நாடான அமெரிக்காவையும் கரோனா வைரஸ் கதிகலங்க வைத்து வருகிறது. அமெரி்க்காவில் கரோனா வைரஸுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 419 ஆகவும், நோய் தொற்று ஏற்பட்டவர்கள் எண்ணிக்கை 34 ஆயிரமாகவும் அதிகரித்துள்ளது.
மூன்றில் ஒரு அமெரிக்கர் வீட்டிலேயே முடங்கி இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது, குடியரசுக் கட்சியின் செனட்டர் ராண்ட் பால் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில்அனுமதி்க்கப்பட்டுள்ளார்.
சீனாவின் வுஹான் நகரில் உருவான கரோனா வைரஸ் உலகம் முழுவதையும் அச்சத்தின் பிடியில் வைத்துள்ளது. இதுவரை உலகளவில் 4 லட்சம் பேர்வரை பாதிக்கப்பட்டுள்ளனர், 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
உலக வல்லரசான அமெரிக்காவையும் கரோனா விட்டு வைக்கவில்லை. அமெரிக்காவில் உள்ள 50 மாநிலங்கள் கரோனா வைரஸ் பிடியில் சிக்கியுள்ளன. அமெரிக்காவில் மெல்ல ஊடுருவிய கரோனா வைரஸுக்கு இதுவரை அந்நாட்டில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நேற்றுவரை 33 ஆயிரத்து 546 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 419ஆக உயர்ந்துள்ளது.
நியூயார்க் நகர மேயர் பில் டி பிளாசியோ கூறுகையில் “ அடுத்த 10 நாட்களில் மாநிலத்தில் மிகப்பெரிய அளவுக்கு மருந்து தட்டுப்பாடு ஏற்படும். அரசுக்கு ஏற்கனவே தகவல் தெரிவித்துவிட்டோம்” எனத் தெரிவி்த்தா்
இதுவரை அமெரிக்க மக்கள் 2.50 லட்சத்துக்கும் அதிகமானோர் கரோனா வைரஸ் நோய் தொற்று குறித்து பரிசோதனை செய்துள்ளனர்.
வெள்ளை மாளிகையில் அதிபர் ட்ரம்ப் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “ அமெரிக்காவில் நியூயார்க், கலிபோஃர்னியா, வாஷிங்டன் ஆகிய 3 நகரங்கள் கரோனா வைரஸ் தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
நியூயார்க் நகரில் மட்டும் 15 ஆயிரம் பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 24 மணிநேரத்தில் 5,418 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 144 பேர் நியூயார்க்கில் மட்டும் உயிரிழந்துள்ளனர். ஒரே நாளில் 58 பேர் உயிரிழந்துள்ளார்கள்
நியூயார்க் நகருக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்ய உத்தரவி்டப்பட்டுள்ளது. இந்த 3 நகரங்களும் பேரிடரில் சிக்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏராளமான மருந்துப் பொருட்கள் வந்து கொண்டிருக்கின்றன. சர்ஜிகல் மாஸ்க், முகக்கவசம், கையுறை, செயற்கைசுவாசக் கருவிகள் போன்றவை ஏராளமானவை வாஷிங்டன், நியூயார்க் நகருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
மேலும்,நியூயார்க் நகருக்கு கூடுதலாக 1000 படுக்கைகள் அனுப்பவும் அவசரநிலை மேலாண்மை அமைப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கலிஃபோர்னியாவுக்கு 2000 படுக்கைகள், வாஷிங்டனுக்கு 1000 படுக்கைகள், மருத்துவ வசதிகள் அனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கப்பலில் இயங்கும் பிரத்யேக மருத்துவமனை நியூயார்க், லாஸ் ஏஞ்செல்ஸ் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. மிகப்பெரிய எண்ணிக்கையில் முகக்கவசம், உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அமெரிக்க மக்களுக்கு உண்மையில் இது சோதனையான காலம், நம்மால் வெல்ல முடியும் என்று உறுதியாக நம்புவோம். மக்கள் மன உறுதியுடன் இருந்து கரோனா வைரஸ் எனும் கண்ணுக்குத் தெரியாத எதிரியை எதிர்த்துப் போராட வேண்டும். நாம் போர்களத்தில் இருக்கிறோம். உங்களின் அதிபர் நான் இருக்கிறேன், உங்களுக்காகப்போராடுவேன், கரோனாவை வெல்லும் வரை நான் ஓய மாட்டேன்” எனத் தெரிவி்த்தார்