கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் டெல்லியில் வரும் 31-ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்து டெல்லி போலீஸார் உத்தரவிட்டுள்ளனர்.
இந்தத் தடை உத்தரவால் சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் ஆகியவற்றை எதிர்த்து கடந்த 90 நாட்களுக்கும் மேலாக ஷாகின் பாக், ஜாமியா மிலியா பகுதியில் மக்கள் யாரும் இனிவரும் நாட்களில் போராட்டம் நடத்த முடியாது. ஒரு இடத்தில் 4 நபர்களுக்கு மேல் கூட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க ஒவ்வொரு மாநில அரசும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இன்று நடைமுறைப்படுத்தப்பட்ட மக்கள் ஊரடங்கு உத்தரவுக்கு மக்கள் மத்தியில் நல்ல ஆதரவு இருந்ததால், கரோனா வைரஸ் பரவல் சங்கிலியை உடைக்கும் வகையில் பல மாநிலங்கள் லாக்-டவுன் அறிவித்து வருகின்றன.
இந்தியாவில் இதுவரை கரோனாவுக்கு 341 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 7 பேர் உயிரிழந்துள்ளனர். டெல்லியில் 27 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அடுத்துவரும் நாட்களில் மக்களின் சமூகத் தொடர்பைத் துண்டிக்கும் வகையில் பல அதிரடி நடவடிக்கைகளை டெல்லி அரசு எடுத்துள்ளது.
இதுகுறித்து டெல்லி போலீஸ் ஆணையர் எஸ்என் ஸ்ரீவஸ்தவா நிருபர்களிடம் இன்று கூறுகையில், ''கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மக்கள் கூடுவதைத் தடுக்க வேண்டும். இதற்காக டெல்லியில் நாளை காலை 6 மணி முதல் வரும் 31-ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.
இந்தக் காலகட்டத்தில் டெல்லியில் போராட்டம், பேரணி, கூட்டம் நடத்தத் தடை விதிக்கப்படுகிறது. கலாச்சார ரீதியாக, அரசியல் ரீதியாக, சமூக ரீதியாக, மதரீதியாக கூடுவது, விளையாட்டுப் போட்டிகள், கருத்தரங்கம், மாநாடு நடத்தவும் தடை விதிக்கப்படுகிறது.
வாரச்சந்தை, பொருட்காட்சி, கண்காட்சி, தனியார் நிறுவனங்கள் மூலம் சுற்றுலா செல்வது தடை விதிக்கப்படுகிறது. டெல்லியைச் சேர்ந்த யாருக்கேனும் கோவிட்-19 அறிகுறிகள் இருந்தால், அவர் உடனடியாக சுய தனிமைக்குச் செல்ல வேண்டும், அல்லது மருத்துவர்களின் அறிவுரைக்கு இணங்க வேண்டும். அவ்வாறு மருத்துவர்கள் உத்தரவுக்குப் பணியாவிட்டால், அவர்கள் மீது ஐபிசி 188 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும், கைது செய்யப்படுவார்கள்” எனத் தெரிவித்தார்.