பிரதிநிதித்துவப்படம் 
கரோனா வைரஸ்

கரோனா வைரஸ் தீவிரம்: இந்தியாவில் 7-வது உயிரிழப்பு; குஜராத்தில் முதல் பலி

பிடிஐ

கரோனா வைரஸால் இந்தியா இன்று ஒரே நாளில் 3-வது உயிரிழப்பைச் சந்தித்துள்ளது. குஜராத் மாநிலம் சூரத்தில் 69 வயது முதியவர் கரோனா வைரஸால் உயிரிழந்தார். அந்த மாநிலத்துக்கு இது முதல் உயிரிழப்பாகும்.

சீனாவின் வூஹான் நகரை மையாக வைத்து தாக்கத் தொடங்கிய கரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதுவரை உலகில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிர்கள் பலியாகியுள்ளன.

இந்தியாவில் கரோனா வைரஸ் தனது கோர முகத்தைக் காட்டி அச்சுறுத்தி வருகிறது. பாதிப்பும், பலியும் கடந்த வாரத்தில் குறைந்திருந்த நிலையில் இந்த வாரத்தில் அதிகரித்து வருகிறது. கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க மத்திய அரசும், மாநிலஅரசுகளும் பல்வேறு நடிவடிக்கைகளை எடுத்தாலும் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இதுவரை இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் உறுதி செய்யப்பட்ட எண்ணிக்கை 341 ஆக அதிகரித்துள்ளது, உயிரிழப்பும் 7-ஆக உயர்ந்துள்ளது. குஜராத் மாநிலம், சூரத் நகரில் 63 வயது முதியவர் உயிரிழந்துள்ளார். இன்று ஒரேநாளில் மட்டும் பிஹார், மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய 3 மாநிலங்கள் உயிரிழப்பைச் சந்தித்துள்ளன.

கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மும்பையில் உள்ள ஹெச்என் ரிலையன்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்த முதியவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். பிஹாரில் மூதாட்டி ஒருவர் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

இந்நிலையில் குஜராத் மாநிலம் சூரத் நகரில் உள்ள தனியார் மருத்துவமனைையில் இன்று உயிரிழந்தார். இந்த முதியவர் டெல்லி, ஜெய்ப்பூர் ஆகிய இடங்களுக்குச் சென்றுவிட்டுத் திரும்பியுள்ளார். அப்போது கரோனா வைரஸ் அறிகுறிகள் இருந்ததையடுத்து கடந்த 17-ம் தேதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஏற்கெனவே இந்த முதியவருக்கு சிறுநீரகம் தொடர்பான நோய், ஆஸ்துமா இருந்தது. அதோடு கரோனா வைரஸ் தொற்றும் ஏற்பட்டதால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தத் தகவலை சூரத் மாவட்ட ஆட்சியர் தவால்குமார் உறுதி செய்துள்ளார்.

இது தவிர வதோதரா நகரில் உள்ள மருத்துவமனையில் 65 வயது மூதாட்டி ஒருவரும் இன்று உயிரிழந்தார். ஆனால், அவர் கோவிட்-19 நோயால் இறந்தாரா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. பரிசோதனை முடிவுகளுக்காக மருத்துவர்களும், அதிகாரிகளும் காத்திருக்கின்றனர்

SCROLL FOR NEXT