கரோனா வைரஸ்

வெறிச்சோடிய திண்டுக்கல் மாவட்டம்: அதிகாலையில் திறக்கப்பட்ட கறிக்கடைகள்

பி.டி.ரவிச்சந்திரன்

பிரதமரின் வேண்டுகோளுக்கிணங்க சுய ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் நாளான இன்று திண்டுக்கல் மாவட்டத்தின் பல பகுதிகள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடிக் காணப்பட்டன.

ஆனால், இன்று அதிகாலையில் ஆட்டுக்கறி, கோழிக்கறி கடைகள் திறந்ததால் மக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. டீக்கடைகளும் வழக்கம்போல் திறந்தன. ஆனால் போலீஸாரின் எச்சரிக்கையை அடுத்து காலை 7.30 மணிக்கு மேல் கடைகள் அடைக்கப்பட்டன.

திண்டுக்கல் நகரில் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டிருந்ததன. ஆனால் புறநகர் பகுதியில் இன்று காலையில் வழக்கம்போல் டீக்கடைகள், கறிக் கடைகள் திறந்து செயல்படத் தொடங்கின. அதிகாலையிலேயே ஆட்டுக்கறி, கோழிக்கறிகளை வாங்க மக்கள் கடை முன்பு குவிந்தனர். டீக்கடைகளிலும் கூட்டம் காணப்பட்டது. இதையறிந்த போலீஸார் காலை 7 மணிக்கு மேல் கடைகளை அடைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர். இதையடுத்து 7.30 மணிக்கு மேல் சிலர் கடைகளை அடைத்தனர்.

திண்டுக்கல் பேருந்து நிலையம் வெறிச்சோடிக் காணப்பட்டது. கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டிருந்ததால் கடை வீதிகளில் ஆள் நடமாட்டம் இல்லை. ஆட்டோக்கள் இயங்கவில்லை. ஞாயிற்றுக்கிழமை தேவாலாயங்களில் நடைபெறும் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெறவில்லை. திண்டுக்கல்லில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் நடந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.

பழநி

பழநி பேருந்து நிலையம், கடைவீதி, காய்கறிமார்க்கெட் ஆகியவற்றில் மக்கள் கூட்டம் காணப்படவில்லை. பெரும்பாலான மக்கள் பிரதமரின் அறிவுரையை ஏற்று வீ்ட்டிற்குள் முடங்கினர். இதனால் பழநி நகரில் மக்கள் நடமாட்டம் காணப்படவில்லை. பழநி நகராட்சி ஆணையாளர் லட்சுமணன் நகர வீதிகளில் கடைகள் ஏதும் திறந்துள்ளதா என ஆய்வு செய்தார்.

ஒட்டன்சத்திரம்

தமிழகத்தில் மிகப்பெரிய மார்க்கெட்களில் ஒன்றான ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி மார்க்கெட் இன்று அடைக்கப்பட்டிருந்தது. முன்னதாகவே விவசாயிகளுக்கு தெரிவிக்கப்பட்டதால் காய்கறிகள் கொண்டு வருவதை விவசாயிகள் தவிர்த்தனர்.

கொடைக்கானல்

கொடைக்கானலில் சுற்றுலாத் தலங்கள் அடைக்கப்பட்டதால் ஏற்கெனவே வெறிச்சோடிக்கிடந்த நிலையில் இன்று ஊரடங்கால் உள்ளூர் மக்களும் நடமாட்டம் இன்றி காணப்பட்டது.

வத்தலகுண்டு நகரில் பேருந்து நிலையம், கடைவீதி வெறிச்சோடிக் காணப்பட்டது. பல வீடுகளில் வேப்பிலை வைத்தும், வாசலில் மஞ்சள் தெளித்தும் இருந்தனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் நகர்ப்புறங்களில் மக்கள் நடமாட்டம் இல்லாத நிலையில் கிராமப்புறங்களில் மக்கள் வழக்கம்போல் தங்கள் செயல்களில் ஈடுபட்டனர். கிராமப்புறங்களில் ஊரடங்கு முழுமையாக கடைப்பிடிக்கப்படவில்லை.

SCROLL FOR NEXT