தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளது என, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதனால் தமிழகத்தில் கரோனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கரோனா வைரஸால் இதுவரை 334 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நேற்று வரை 6 ஆக இருந்தது.
ஏமனிலிருந்து வந்த காஞ்சிபுரம் பொறியியல் பட்டதாரி ஒருவருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. அதன் பின்னர் டெல்லியிலிருந்து சென்னைக்கு ரயிலில் வந்த வட மாநில இளைஞர் ஒருவருக்குத் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருடன் தங்கியிருந்த 8 பேர் மற்றும் ரயிலில் உடன் பயணம் செய்தவர்கள் எனப் பலரும் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், இரு தினங்களுக்கு முன் மூன்றாவதாக அயர்லாந்திலிருந்து வந்த இளைஞர் ஒருவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது கண்டறியப்பட்டது.
இந்நிலையில், நேற்று திடீரென ஒரே நாளில் 3 பேர் கரோனா வைரஸால் பாதிப்புக்குள்ளானது கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. ஸ்பெயினில் இருந்து தமிழகம் வந்த ஒரு பயணிக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று (மார்ச் 22) தன் ட்விட்டர் பக்கத்தில் "ஸ்பெயினில் இருந்து தமிழகம் வந்த ஒரு பயணிக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அவர் தனிமைப்படுத்தப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது" எனப் பதிவிட்டுள்ளார்.
இதனால், தமிழகத்தில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.