வெறிச்சோடிக் காணப்படும் சென்ட்ரல் ரயில் நிலையம். 
கரோனா வைரஸ்

சுய ஊரடங்கு: ரயில் சேவைகள் ரத்து; காலியாகக் காட்சியளித்த சென்ட்ரல் ரயில் நிலையம்

செய்திப்பிரிவு

சுய ஊரடங்கு காரணமாக சென்னையில் இன்று அதிக அளவிலான ரயில்களின் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் பிரதமர் மோடியின் வேண்டுகோளுக்கு இணங்க இன்று (மார்ச் 22) சுய ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் நிலையில், நேற்று இரவு முதல் இன்று இரவு 10 மணி வரை சென்னையில் அதிக அளவிலான ரயில்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதுதவிர பயணிகளின் வருகை குறைவு காரணமாக 100-க்கும் மேற்பட்ட ரயில்களின் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

மேலும், மார்ச் 21 முதல் ஜூன் 21 வரை ரத்து செய்யப்படும் ரயில் டிக்கெட்டுகளுக்கான கட்டணங்களை திரும்பப் பெறுவதில் சில சலுகைகளையும் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, கட்டணங்களை திரும்பப் பெற 3 நாட்களுக்குள் விண்ணப்பிக்கலாம் என்ற விதிமுறைக்குப் பதிலாக, 3 மாதங்களாக கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், கட்டணத்தை திரும்பப் பெறவும் 3 மாதங்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து இன்று எந்த ரயிலும் புறப்படவில்லை, ஆனால், வட மாநிலங்களில் இருந்து வரும் ரயில்களின் வருகை காலை 8.15 மணியளவு வரை இருந்தது.

எழும்பூர் ரயில் நிலையம் அருகே

எனினும், சென்னையில் கட்டுப்பாடுகளுடன் மின்சார ரயில்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை சென்ட்ரல் - அரக்கோணம், சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி, சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு மார்க்கத்தில் காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் ஒரு மணிநேரத்திற்கு ஒரு சிறப்பு ரயில் இயக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சுய ஊரடங்கு காரணமாக சென்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூர் ரயில் நிலையம் ஆகியவை வெறிச்சோடிக் காணப்பட்டன.

SCROLL FOR NEXT