தாய்லாந்து சென்று திரும்பியதை அறிவிக்காமல் மறைத்த மகாராஷ்ட்ராவைச் சேர்ந்த தம்பதி மீது போலீஸார் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
அயல்நாட்டிலிருந்து இந்தியா திரும்புவோர் கட்டாய தனிமைப்பிரிவில் இருக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ள நிலையில் இந்த தம்பதியினர் அயல்நாட்டு பயணத்தை தெரிவிக்காமல் மறைத்ததையடுத்து வழக்கைச் சந்திக்கின்றனர்.
மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கான் மாவட்ட நிர்வாக ஆய்வுக்குழு வெள்ளிக்கிழமையன்று இந்தத் தம்பதியினரை கண்டுபிடித்தனர். இவர்கள் தாய்லாந்து பயணித்ததை முதலில் ஒப்புக் கொள்ளவில்லை.
கஜானன் நகரைச் சேர்ந்த இந்தத் தம்பதியினரை சர்வே டீம் கேள்வி கேட்ட பொது, புனேயில் தங்கள் மகன் வீட்டுக்குச் சென்றதாகத் தெரிவித்தனர். ஆனால் மேலும் விசாரணையை முடுக்க இவர்கள் தாய்லாந்து சென்று திரும்பியது தெரியவந்தது.
இவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் தொற்று நோய்கள் தடுப்புச் சட்டம் ஆகியவை பாய்ந்துள்ளன.
தற்போது இந்தத் தம்பதியினரின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதோடு இருவரையும் தனிமைப்படுத்தியுள்ளனர் அதிகாரிகள்.