கரோனா வைரஸ்

கரோனா வைரஸ்: வணிகம், ஊழியர்கள் சுகாதாரத்தில் முனைப்பு காட்டும் அமேசான், ஃபிளிப்கார்ட்

செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால், அமேசான், ஃபிளிப்கார்ட் நிறுவனங்கள் வணிகத்தில் மட்டுமின்றி ஊழியர்கள் சுகாதாரத்திலும் முனைப்பு காட்டி வருகின்றன.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. மத்திய அரசு, திரையரங்குகள், மக்கள் கூடுமிடங்கள், ஷாப்பிங் மால்கள் போன்றவற்றை வரும் 31-ம் தேதி வரை திறக்கத் தடை விதித்துள்ளது.

இதனால் அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டு ஆன்லைன் விற்பனை சூடு பிடித்துள்ளது. அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் இடையே யார் அதிகப் பொருட்களை விற்பனை செய்வது என்பதில் போட்டி உருவாகியுள்ளது. இரண்டு நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு சலுகைகளை அறிவித்து வருகின்றன.

இதுகுறித்து அமேசான் கூறும்போது, ''எங்களால் முடிந்தவரை விரைவாக வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை விற்பனை செய்து வருகிறோம். சில பிரபல பிராண்டுகளில் பொருட்களின் கையிருப்புகள் காலியாகிவிட்டன. குறிப்பாக வீட்டு உபயோகப் பொருட்கள் விரைவாக விற்றுத் தீர்ந்து வருகின்றன.

எங்களின் ஊழியர்கள் முறையான சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடைப்பிடிப்பதை உறுதி செய்கிறோம். நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம். அலுவலகத்தில் பார்வையாளர்களின் வருகையை ரத்து செய்திருக்கிறோம். அனைத்து இடங்களிலும் சுகாதாரத்தை உறுதி செய்கிறோம்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபிளிப்கார்ட் செய்தித் தொடர்பாளர் கூறும்போது, ''எங்கள் அலுவலகத் தொடர்பில் 1.2 லட்சம் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். அவர்கள் அனைவருக்கும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.

டெலிவரி ஊழியர்களுக்கு காப்பீடு வழங்கப்பட்டுள்ளது. கோவிட்-19 தொற்று உள்ளவர்களுடன் தொடர்பில் உள்ள ஊழியர்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர். சம்பளத்துடன் கூடிய விடுமுறையும் அளிக்கப்படுகிறது'' என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT