பிரதிநிதித்துவப் படம். 
கரோனா வைரஸ்

கரோனா: கோவை மாவட்டத்தின் அனைத்து சோதனைச் சாவடிகளும் இன்று மாலை முதல் மூடல்; ஆட்சியர் அறிவிப்பு

ஆர்.கிருஷ்ணகுமார்

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக கேரள மாநில எல்லையோரத்தில் உள்ள கோவை மாவட்டத்தின் அனைத்து சோதனைச் சாவடிகளும் இன்று மாலை முதல் மூடப்படுவதாக, கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஏற்கெனவே கரோனா வைரஸ் தொற்று 3 பேருக்கு உறுதியாகியுள்ளது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், வணிக வளாகங்கள், திரையரங்குகள், சுற்றுலாத் தலங்கள், பெரிய கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில், கேரளாவில் கரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அதுமட்டுமல்லாமல், பறவைக் காய்ச்சலின் தாக்கமும் கேரளாவில் அதிகரித்துள்ளது. இதனால், தமிழகத்தில் கோவை உள்ளிட்ட கேரள எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கேரள எல்லையிலிருந்து வரும் எல்லாவித வாகனங்களும் கடுமையாகப் பரிசோதிக்கப்பட்ட பின்னரே தமிழகத்திற்குள் அனுமதிக்கப்பட்டன.

இந்நிலையில், கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக கேரள மாநில எல்லையோரத்தில் உள்ள கோவை மாவட்டத்தின் அனைத்து சோதனைச் சாவடிகளும் இன்று (மார்ச் 20) மாலை முதல் மூடப்படுகிறது என,கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பால், கோவை மாவட்டத்தில் இருந்து கேரள மாநிலத்திற்கும், கேரள மாநிலத்தில் இருந்து கோவை மாவட்டத்திற்கும் அனைத்து வாகனத் தொடர்புகளும் நிறுத்தி வைக்கப்படுகின்றன.

SCROLL FOR NEXT