ரயில் நிலையங்களையும், ரயில்களையும் சுத்தமாக வைத்துக்கொள்வதோடு அனைத்துப் பயணிகளையும் பரிசோதனை செய்ய வேண்டும் என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, ஜி.கே.வாசன் இன்று (மார்ச் 20) வெளியிட்ட அறிக்கையில், "நாடு முழுவதும் தற்போது கரோனா வைரஸ் தொற்று தடுப்புக்காக மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கவை என்றாலும் ரயிலில் பயணம் செய்ய வருகின்ற பயணிகளைப் பரிசோதனை செய்வதோடு அவர்களின் பயணத்திற்கும் உதவிட வேண்டும்.
தற்போது பள்ளி, கல்லூரி மற்றும் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால் நகர் பகுதிகளில் வசிப்போர் சொந்த ஊருக்கு ரயிலில் பயணம் செல்கின்றனர். ஆனால், ரயில்வே நிர்வாகம் டிக்கெட்டை முன்பதிவு செய்வதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. எனவே, ரயிலில் பயணம் செய்ய விரும்புபவர்கள் முன்பதிவு செய்ய முடியாத சூழலிலும் தற்போது ஊருக்குச் செல்ல அவசரகாலப் பயணமாக ரயிலில் பயணம் செய்ய விரும்புகிறார்கள்.
பொதுவாக, ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்யாத நிலையில் பணம் கொடுத்து ஓப்பன் டிக்கெட் வாங்கிக்கொண்டு ரயிலில் பயணம் செய்ய முடியும். மேலும், ஓப்பன் டிக்கெட்டில் பயணம் செய்ய வேண்டிய பெட்டிகளின் எண்ணிக்கையும், இருக்கைகளும் குறைவானதாக இருக்கிறது.
எனவே, தற்போதைய அவசரகாலப் பயணமாக ரயிலில் பயணம் செய்ய விரும்புபவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருப்பதால் அவர்கள் ஓப்பன் டிக்கெட்டை வாங்கிக்கொண்டு அவர்களுக்கு உரிய பெட்டியில் மட்டுமே பயணம் செய்யும்போது கூட்ட நெரிசலில் சிக்கி பெரும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள்.
மேலும், முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் காலி இருக்கைகள் இருந்தும் அந்தப் பெட்டியில் முன்பதிவு செய்யாதவர்கள் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவதில்லை. குறிப்பாக, முன்பதிவு செய்து பயணம் செய்ய வேண்டிய பெட்டிகளில் ஓப்பன் டிக்கெட் வாங்கியவர்கள் பயணம் செய்யக் கூடாது என்ற விதிமுறை இருந்தாலும் தற்போதைய சூழலில் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் விதமாக குறிப்பிட்ட காலத்திற்கு விதிமுறைகளைத் தளர்த்திட ரயில்வே நிர்வாகம் முன்வர வேண்டும்.
மேலும், ரயில் நிலையங்களையும், ரயில்களையும் சுத்தமாக வைத்துக்கொள்வதோடு அனைத்துப் பயணிகளையும் பரிசோதனை செய்ய வேண்டும்.
எனவே, கரோனா வைரஸ் தொற்று தடுப்புக்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்ற வேளையில் ரயில் பயணிகளின் சுகாதாரமான, பாதுகாப்பான பயணத்திற்கும் உதவிடும் வகையில் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்" என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.