மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தி வரும் கரோனா வைரஸ் நோய்த் தொற்று பாதிப்புக்கு உலகம் முழுவதும் இதுவரை 9,020 பேர் பலியானதாக அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த டிசம்பம் மாதம் சீனாவில் உள்ள வூஹான் நகரில் உருவான கரோனா வைரஸ் முதலில் அந்நகரில் உள்ள மக்களைப் பாதித்தது. பின்னர் வூஹானில் பெரும் உயிர் பலிகளை ஏற்படுத்தி படிப்படியாக சீனாவைக் கடந்து பரவத் தொடங்கியது.
சீனாவில் உருவான பாதிப்புகள் மெல்ல மெல்லத் தெரிய ஆரம்பித்த பிறகும், இதன் வேகம் சரியாக உணரப்படாத நிலையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் உலகம் முழுவதும் 150க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியது. இன்றைய நிலவரப்படி 2 லட்சத்திற்கும் அதிகமான மக்களை கரோனா வைரஸ் பாதித்துள்ளது.
இந்நிலையில் இன்று பிற்பகல் வெளியான அதிகாரபூர்வ தகவல்கள்படி கரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கு இதுவரை 9,020 பேர் பலியாகியுள்ளதாக ஏஎஃப்பி தெரிவித்துள்ளது.
ஐரோப்பாவில் 4,134 பேரும் சீனா உள்ளிட்ட ஆசியாவில் 3,416 பேரும் இந்நோய்க்குப் பலியாகியுள்ளனர்.
ஐரோப்பாவில் 90,293 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 712 பேர் உயிரிழந்துள்ளனர். கோவிட்-19 தற்போது ஐரோப்பிய நாடுகளில் மிக வேகமாகப் பரவி வருகிறது.