கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட கொல்கத்தா இளைஞருடன் விமான நிலையத்தில் உரையாடி அவரின் ஆவணங்களை பரிசோதித்துத் தடையில்லா சான்றளித்த குடியேற்று துறை அதிகாரிகள் இருவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
உலகளவில் 8970 பேர் பலி, இந்தியாவில் 171 பேர் பாதிப்பு மூவர் பலி என்பது இந்த செய்தி பதிவு செய்யப்பட்டபோது நிலவிய கரோனா தாக்கத்தின் நிலவரம்.
இந்நிலையில், இங்கிலாந்தில் இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று கொல்கத்தா திரும்பிய இளைஞர் ஒருவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருப்பதை தேசிய காலரா மற்றும் தொற்று நோய் தடுப்பு மையம் உறுதி செய்தது.
மேற்குவங்க மாநிலத்தில் இவர் தான் முதல் கரோனா நோயாளி. இவருக்கு 18 வயதாகிறது. லண்டனில் படித்துக் கொண்டிருந்த இவர் கடந்த ஞாயிறன்று தாயகம் திரும்பினார்.
தன்னுடன் லண்டனில் ஒன்றாக இருந்த நண்பர்களுக்கு கரோனா உறுதியான தகவலைத் தெரிந்து கொண்டு குடும்பத்தினர் மூலம் அடுத்த நாளே மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு அவரின் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. அதை பரிசோதனைக்கு உட்படுத்தியதில் அவருக்கு கரோனா இருப்பது உறுதியானது.
இதனையடுத்து அந்த இளைஞர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். அவரது பெற்றோர் மற்றும் விமானநிலையத்திலிருந்து வீடு செல்ல அவர் பயன்படுத்திய காரின் ஓட்டுநர் ஆகியோர் ஏற்கெனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, கொல்கத்தா நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலைய குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் இருவரை மேற்குவங்க சுகாதாரத் துறை 12 நாட்களுக்கு வீட்டில் தனிமையில் இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளது. அவர்களைத் தொடர்ந்து கண்காணிக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட இந்த இரண்டு அதிகாரிகளும் கரோனா பாதிக்கப்பட்ட இளைஞரின் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை சரிபார்த்து அவரை விமான நிலையத்தில் இருந்து வெளியே செல்ல அனுமதி வழங்கியவர்கள். எனவே பாதுகாப்புக் காரணங்களுக்காக அவர்கள் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
தொற்று ஏற்பட்டவர்களுடன் பழகியவர்களையும் தனிமைப்படுத்தி கண்காணிப்பதே கரோனா தொற்றுச் சங்கிலியை உடைக்க ஒரே வழி என்பதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.