வெறிச்சோடியுள்ள அரவிந்தர் ஆசிரமம். 
கரோனா வைரஸ்

வெறிச்சோடிய புதுச்சேரி; மக்கள் கூடும் இடங்கள் முற்றிலும் மூடல்: தவிக்கும் தினக்கூலி ஊழியர்கள்

செ.ஞானபிரகாஷ்

கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் சுற்றுலா நகரமான புதுச்சேரி முற்றிலும் வெறிச்சோடத் தொடங்கியுள்ளது. மக்கள் கூடும் முக்கிய இடங்கள் முற்றிலும் மூடப்பட்டுள்ளன. தினந்தோறும் உழைத்தால் தான் சாப்பிடவே முடியும் என்கிற நிலையுள்ள தினக்கூலி ஊழியர்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சுற்றுலா நகரான புதுச்சேரியில் மக்கள் கூடும் இடங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. குறிப்பாக பூங்காக்கள், படகு குழாம், திரையரங்குகள், கல்விக்கூடங்கள் என முக்கிய இடங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் குழந்தைகள் வீட்டில் இருக்க வேண்டிய சூழல் உண்டாகியுள்ளது. குறிப்பாக, பல்வேறு கோயில்களில் இருமல், சளி பிரச்சினைகள் உள்ளவர்கள் வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரவிந்தர் ஆசிரமத்திலும் மக்கள் வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளில் குறிப்பிடத்தக்கவர்கள் எதிர்பார்த்து வரும் மதுபானக்கூடங்கள் இன்று முதல் மூடப்பட்டுள்ளன. அதே நேரத்தில் சில்லறை மற்றும் மொத்த மதுபான விற்பனைக் கடைகள் வழக்கம்போல் திறந்துள்ளன.

"புதுச்சேரியின் 4 பிராந்தியங்களில் 400-க்கும் மேற்பட்ட சில்லறை மற்றும் மொத்த மதுபான விற்பனையகங்கள் உள்ளன. இவற்றில் 300-க்கும் மேற்பட்ட சில்லறைக் கடைகளில் உணவுடன் மது அருந்தக்கூடிய அனுமதியை புதுச்சேரி அரசு அளித்துள்ளது. கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் இன்று முதல் பார்கள் மூடப்பட்டுள்ளன. பாரை நம்பியிருக்கும் 3,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் தினக்கூலி ஊதியம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது" என்று மதுபான விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வெறிச்சோடி காணப்படும் பூங்கா.

அதேபோல், சுற்றுலாப் பயணிகளின் வருகையால் வாழும் ரிக்ஷா மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள், சிறு உணவுக்கூடத்தினர், உணவகம், கடை வியாபாரிகள், டீக்கடை ஊழியர்கள் தொடங்கி சாலையில் சிறு பொருட்கள் விற்போர் என ஏராளமானோர் தங்களின் வாழ்க்கை முற்றிலும் நிலைகுலைந்துள்ளதாகத் தெரிவித்தனர்.

மணக்குள விநாயகர் கோயில் அருகே பூ விற்கும் பெண்கள் கூறுகையில், "தினமும் பூ கட்டி விற்பது வழக்கம். கடந்த சில நாட்களாகவே பக்தர்கள் வருகை குறைந்துவிட்டது. வியாபாரம் இல்லாததால் கஷ்டமாக உள்ளது" என்றனர்.

கோயில் வாசலில் பக்தர்களிடம் பிச்சை கோரும் வயது முதிர்ந்தோர், மாற்றுத்திறனாளிகள் பலரும் பக்தர்களே வராததால் உணவு கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது என்றனர். பலரும் பசியுடன் வாழ்க்கை கழிவதாக விரக்தியுடன் தெரிவித்தனர்.

விழாக்களில் மீதமாகும் உணவைப் பெற்று ஆதரவற்றோர் இல்லம் தொடங்கி பல இடங்களில் கொண்டு சேர்க்கும் இளையோர் கூறுகையில், "திருமணம், பிறந்த நாள், நிச்சயதார்த்தம் என பல விழாக்களில் மீதமாகும் உணவைப் பெற்று ஆதரவற்றோர் இல்லம் தொடங்கி சாலையோரம் வசிக்கும் பலருக்கும் வழங்குவது வழக்கம். ஆனால், தற்போது விழாக்கள் குறைந்துள்ளதாலும், பலருக்கு உணவு தருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சாலையோரம் உணவுக்காகக் காத்திருக்கும் பலருக்கும் உணவு கிடைப்பதில்லை. இன்னும் 15 நாட்கள் என்றால் என்னாவது?" என்று கவலையைப் பகிர்ந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT