மத்திய, மாநில அரசுகள் வங்கிக்கடனை கட்டாயப்படுத்தி வசூல் செய்யாமல் இருக்கவும் குறைந்தபட்சம் 6 மாத கால அவகாசம் வழங்கவும் அறிவிப்பு வெளியிட முன்வர வேண்டும் என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக ஜி,கே.வாசன் இன்று (மார்ச் 19) வெளியிட்ட அறிக்கையில், "உலகளவில் கரோனா வைரஸ் தொற்று நோயால் உயிரிழப்புகள், பொருளாதார பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் மத்திய, மாநில அரசுகள் நம் நாட்டிலும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதை கவனத்தில் கொண்டு மக்கள் நலன் காக்கும் அறிவிப்புகளை வெளியிட வேண்டும்.
குறிப்பாக, கடந்த சில மாதங்களாகவே சிறு, குறு, நடுத்தர தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அதாவது, பொருளாதாரத்தில் பின்னடைவு, வேலையில்லா திண்டாட்டம், வங்கிக்கடன் பிரச்சினை போன்ற பல்வேறு காரணங்களால் பல்வேறு தொழில்கள் தேக்கமடைந்துள்ளன.
இந்நிலையில், தற்போது இந்தியாவிலும் கரோனா வைரஸ் தொற்று நோயின் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதாவது, விவசாயத் தொழில் பாதிக்கப்பட்டு, கல்வி நிலையங்கள், வணிக வளாகங்கள், தனியார் நிறுவனங்கள், சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் போன்றவை மூடப்பட்டுள்ளன.
மேலும், கரோனா வைரஸ் காரணமாக விவசாயம், கல்வி, தொழில், வணிகம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளன.
மத்திய, மாநில அரசுகள் கரோனா வைரஸ் தடுப்புக்காக எடுத்து வரும் தொடர் நடவடிக்கைகளால் அனைத்து தரப்பு மக்களும் பயன் பெறுவது ஒரு புறம் என்றால் பொருளாதார ரீதியாக வருவாய் கிடைக்காத நிலைக்கும் மக்கள் தள்ளப்படுவார்கள்.
எனவே, மத்திய, மாநில அரசுகள் வங்கிகளில் கடன் வாங்கி தொழில் செய்தவர்களிடம் வட்டிக்கான மாதத்தவனையை கட்ட கட்டாயப்படுத்தக்கூடாது. வட்டித்தவனையை கட்ட முடியாதவர்களுக்கு குறைந்தபட்சம் 6 மாத கால அவகாசம் அளித்து அதன் பிறகு வசூல் செய்ய வேண்டும். காரணம், இன்றைய சூழலில் கரோனா வைரஸ் தடுப்புக்காக எடுக்கப்பட்டுள்ள நல்ல நடவடிக்கைகளால் அனைத்துத் தரப்பு மக்களும் பாதுகாக்கப்பட்டாலும், பொருளாதாரத்தை ஈட்ட முடியாமல் சிரமப்படுகின்றனர்.
எனவே, மத்திய, மாநில அரசுகள் வங்கிக்கடனை கட்டாயப்படுத்தி வசூல் செய்யாமல் இருக்கவும், வட்டிக்கான தவனையை செலுத்துவதற்கு குறைந்தபட்சம் 6 மாத கால அவகாசம் வழங்கவும் அறிவிப்பு வெளியிட முன்வர வேண்டும்" என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.