உக்ரைனில் கரோனா வைரஸ் அச்சத்தில் தவிக்கும் மக்களிடம், லாப நோக்கத்துடன் 1 லட்சம் முகக் கவசங்களைத் திருடி நம்பமுடியாத விலைக்கு விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐரோப்பாவில் 2500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில் ஐரோப்பிய நாடுகள் தம் எல்லைகளை மூடியுள்ளன.
உக்ரைன் நாட்டில் கரோனா பாதிப்பின் காரணமாக இதுவரை ஏழு பேருக்கு நோய்த் தொற்று உறுதியாகியுள்ளது. கோவிட்-19 காய்ச்சலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. கொடிய வைரஸ் நோய்த் தொற்று பரவாமல் தடுக்க பொதுப் போக்குவரத்து, பார்கள், உணவகங்கள் மற்றும் வணிக மையங்களை மூடுவதாக உக்ரைன் அரசு திங்களன்று அறிவித்தது.
கடந்த மாதம் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சீனாவிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களை தனிமைப்படுத்துவதற்காக உக்ரைன் அழைத்து வரப்பட்டபோது மக்கள் போலீஸாருடன் மோதினர். அரசாங்கத்தின் திட்டங்கள் தொடர்பாக நாட்டின் மத்திய பிராந்தியத்தில் உள்ள ஒரு மருத்துவ வசதி செய்யப்பட்ட முகாமில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இம்மோதல் வெடித்தது.
இந்நிலையில் நேற்று ஒரு சம்பவத்தில், உக்ரைனில் அறுவை சிகிச்சையின்போது பயன்படுத்தப்படக்கூடிய அரிதான 1 லட்சம் முகக் கவசங்கள் அதிக விலைக்கு கள்ளச் சந்தையில் விற்றதாக 3 பேரைபோலீஸார் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து உக்ரைன் அரசின் கியேவிலுள்ள அரசு வழக்கறிஞர் அலுவலகம் கூறியுள்ளதாவது:
''கரோனா வைரஸ் தாக்கத்தினால் சில சில்லறை விற்பனையாளர்கள் கடும் விலை உயர்வை ஏற்படுத்தியதால், உக்ரைனில் அறுவை சிகிச்சைக்கான முகக் கவசங்களுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
அதிக விலைக்கு விற்க வேண்டுமென்ற லாப நோக்கத்துடன் ஒரு கும்பல் திருடி விற்றுள்ள இந்த முகக் கவசங்களை வைத்து உக்ரைனில் மறைமுகமான பகுதியில் ஒரு கள்ளச் சந்தையை நடத்தத் தொடங்கினர். ஆனால் மக்கள் யாரும் நினைத்தே பார்க்க முடியாத விலைக்கு இவர்கள் அந்த முகக்கவசங்களை விற்றனர்.
ஒரு கும்பல் அறுவை சிகிச்சையின்போது பயன்படுத்தப்படும் முகக் கவசங்களை எங்கிருந்தோ திருடி வந்து ஒரு மில்லியன் ஹ்ரிவ்னியா (உக்ரைன் பணம்) அதாவது, சுமார் 44,000 யூரோக்கள், அமெரிக்க டாலரில் 37,000 மதிப்பில் சிலர் விற்றுள்ளனர்.
தங்கள் மறைமுகச் சந்தையை கியே நகரில் தொடங்கியபோது வாங்க வந்த பொதுமக்கள் அதிக விலை தராததால் அவர்கள் மீதே கள்ளச் சந்தையில் விற்போர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ஆயுதமேந்திய உக்ரைனிய பாதுகாப்புக் குழு முகக் கவசங்களை கள்ளச் சந்தையில் விற்ற இந்தக் கும்பலை கையும் களவுமாகப் பிடித்து நேற்று சிறையில் தள்ளியது. இதில் சிக்கிய 3 பேர் மீதும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்கள் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும்''.
இவ்வாறு உக்ரைன் அரசின் அரசு வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.