உள்ளூரில் கரோனா வைரஸ் அறிகுறியுடன் உள்ளவர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, ராமதாஸ் இன்று (மார்ச் 18) தன் ட்விட்டர் பக்கத்தில், "சோதனை செய், சோதனை செய், சோதனை செய். கரோனா அறிகுறி உள்ள அனைவரையும் சோதனை செய்யுங்கள் என்பது தான் கரோனா தடுப்புக்காக உலக சுகாதார நிறுவனம் வழங்கியுள்ள ஆலோசனை ஆகும். அதை மதித்து கரோனா சோதனைகளை தீவிரப்படுத்த வேண்டும்!
வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் தமிழ்நாடு வருபவர்களுக்கு மட்டும் தான் கரோனா ஆய்வு நடத்தப்படுகிறது. இந்த சோதனையை உள்ளூரில் கரோனா வைரஸ் அறிகுறியுடன் உள்ளவர்களுக்கும் நீட்டிக்க வேண்டும். விமான நிலையம், துறைமுகங்களின் பணியாளர்களுக்கும் கரோனா ஆய்வு நடத்த வேண்டும்!
கூட்டம் கூடுவதால் கரோனா பரவுவதைத் தடுக்க அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் சரியானவை. கூடுதலாக, அதிக எண்ணிக்கையில் மக்கள் கூடும் அரசு அலுவலகங்கள், வாராந்திர சந்தைகள் ஆகியவற்றுக்கும் விடுமுறை அளித்து தமிழக அரசு ஆணையிட வேண்டும்!
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றின் ஆசிரியர்களும், பிற பணியாளர்களும் பணிக்கு வரும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நோய் தடுப்புக்கு இது உதவாது. நோய்த் தொற்று ஏற்படுவதை தடுக்க, பொதுத்தேர்வு பணியில் உள்ளவர்கள் தவிர மற்றவர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும்" என பதிவிட்டுள்ளார்.