கரோனா பரவுவதைத் தடுக்க கேரள போலீஸார் விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். மாநில காவல்துறையின் ஊடக மையம் சார்பில் இந்த விழிப்புணர்வு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
அந்த வீடியோவில், முகக் கவசம் அணிந்த போலீஸார் 6 பேர் இரண்டு வரிசையில் நின்றுகொண்டு முறையாகக் கைகழுவுதல் எப்படி என்பதை செய்து காட்டுகின்றனர். பின்னணியில் பாடல் ஒலிக்க அதற்கேற்ப சிறு அங்க அசைவுகளுடன் அவர்கள் அந்த நடனத்தை மேற்கொள்கின்றனர். 1.20 நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோ கைகழுவும் முறையைக் கற்பிக்கிறது.
இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது.
கரோனா பரவுவதைத் தடுக்க 'பிரேக் தி செயின்' என்ற திட்டத்தை கேரள சுகாதாரத்துறை அண்மையில் அறிவித்தது.
முன்னதாக இதுகுறித்து கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே. சைலஜா கூறுகையில், "கரோனா வைரஸ் தொற்று சங்கிலித் தொடர்போல் ஒருவர் மூலம் மற்றொருவருக்கோ அல்லது பலருக்கோ பரவி வருகிறது. அந்தச் சங்கிலிப் பின்னலை உடைக்க 'பிரேக் தி செயின்' என்ற திட்டத்தை ஏற்படுத்துகிறோம்.
அதன்படி அனைத்து அரசு, தனியார் நிறுவனங்களிலும் நுழைவுப் பகுதியில் ஒரு பூத் ஏற்படுத்தப்படும். ஒவ்வொருவரும் அந்தப் பூத்தில் சென்று கைகளைக் கழுவிக்கொண்டோ அல்லது ஹேண்ட் சானிட்டிசர் உபயோகித்துக்கொண்டோதான் உள்ளே நுழைய வேண்டும். இதனால் கரோனா வைரஸ் பிறருக்குப் பரவுவதைத் தடுக்க முடியும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், கேரள மாநில போலீஸார் பிரேக் தி செயின் பிரச்சாரத்துக்காக விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டுள்ளது.
கேரளாவில் பல்வேறு பேருந்து நிலையங்களிலும் தற்காலிகமாக கைகழுவும் பேசின் அமைக்கப்பட்டு அங்கு சானிட்டைசர்கள், கை கழுவும் திரவம் ஆகியன வைக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் இதுவரை 147 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 42 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் 30-க்கும் அதிகமானோருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
https://www.facebook.com/statepolicemediacentrekerala/videos/240901263736432/