அரசு மருத்துவமனைகளில் 5 லட்சம் முகக்கவசங்கள் இருப்பில் உள்ளன என, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து துறை சார்பாக எடுக்கப்பட்டுள்ள கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் இன்று (மார்ச் 18) சென்னை, பல்லவன் இல்லத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
அதன்பிறகு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"கிட்டத்தட்ட 22 ஆயிரம் அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் தமிழகம் முழுவதும் இயக்கப்படுகின்றன. 4 ஆயிரம் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 4,600 கம்பெனி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 2,500 ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மொத்தம் 32 ஆயிரம் பேருந்துகள் மூலமாக தமிழகத்தில் ஒரு நாளைக்கு சுமார் 2 கோடியே 50 லட்சம் பேர் பயணிக்கின்றனர்.
போக்குவரத்து துறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பேருந்துகளை பணிமனையில் தினந்தோறும் சுத்தம் செய்ய அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. நடத்துநர்கள், ஓட்டுநர்களை முகக்கவசம் அணியுமாறு அறிவுறுத்தியிருக்கிறோம். பேருந்து நிலையங்களில் கைகளை சுத்தம் செய்வதற்கு உள்ளாட்சித்துறை மூலமாக நடவடிக்கை எடுத்திருக்கிறோம்.
வரும் 31-ம் தேதி வரை பணிமனைகளில் ஓட்டுநர் பழகுநர் உரிமங்கள் வழங்குவதை நிறுத்தி வைத்திருக்கிறோம். குளிர்சாதன பேருந்துகளில் உள்ள திரைச்சீலைகள் அகற்றப்பட்டிருக்கின்றன. பயணிகளுக்கு போர்வைகள் வழங்குவதை நிறுத்திவிட்டோம். வெப்பநிலையை சூழலுக்கு ஏற்ப வைக்க அறிவுறுத்தியுள்ளோம்.
வெளிமாநிலங்களில் இருந்து வரக்கூடிய பேருந்துகள், 21 சோதனைச்சாவடிகளில் கண்காணிக்கப்பட்டு வருகிறது. கேரளா, ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து வரக்கூடிய பேருந்துகளை இங்குள்ள பணிமனைகளில் சுத்தம் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழக பேருந்துகளையும் அந்தந்த மாநிலங்களில் சுத்தம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்திருக்கிறோம்.
முகக்கவசங்களை எல்லோரும் அணிய வேண்டியதில்லை என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. தேவைப்படுவோருக்குக் கொடுக்க சொல்லியிருக்கிறோம். அதற்காக 60 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்துத் துறைக்காக 5 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது"
இவ்வாறு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறும்போது, "அரசு மருத்துவமனைகளில் 5 லட்சம் முகக்கவசங்கள் இருப்பில் உள்ளன. 25 லட்சம் முகக்கவசங்களுக்கு ஆர்டர் செய்துள்ளோம். தேவைக்கு மேல் முகக்கவசங்கள் உள்ளன. முகக்கவசம் அனைவருக்கும் தேவையில்லை. துறை ரீதியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்கின்றன.
தேவையற்ற பயணங்களை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். பார்க், மால்களுக்கு போகக்கூடாது என்பதற்காகத்தான் அவற்றையும் மூடுவதற்கு அறிவுறுத்தியுள்ளோம்" என தெரிவித்தார்.