உலகை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் இந்தியாவிலும் தனது கோர முகத்தைக் காட்டத் தொடங்கியுள்ளது. இதுவரை 137 பேர் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் யாருக்கு அதிகமான பாதிப்பு ஏற்படலாம் என்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவர் விளக்கம் அளித்துள்ளார்.
இந்தியாவில் கரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இதுவரை 17 வெளிநாட்டவர்கள் உள்பட 137 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் கரோனா வைரஸ் யாருக்கு அதிகமாகத் தாக்க வாய்ப்புள்ளது, எந்த ரத்தப் பிரிவினர் கவனமாக இருக்க வேண்டும் என்பது குறித்து டெல்லி எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறியதாவது:
உலக அளவில் எங்களுக்குக் கிடைத்த புள்ளிவிவரங்களை மருத்துவர்கள் ஆய்வு செய்தபோது, அதில் கரோனா வைரஸால் அதிகமாக நோய்த் தொற்றுக்கு ஆளாவது பெண்களைக் காட்டிலும் ஆண்கள்தான் அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள் எனத் தெரியவந்துள்ளது.
இந்த கரோனா வைரஸின் மரபணு புதிய அடுக்கைக் கொண்டது. இது வழக்கமாக உங்களின் செல்லப் பிராணிகளிடம் இருக்காது. உங்களுக்குத் தொற்று ஏற்பட்டால்கூட செல்லப் பிராணிகளுக்குப் பரவாது. இது உருமாற்றம் அடைந்து மனிதர்களைத்தான் பாதிக்கும். இந்த வைரஸின் குறிப்பிட்ட மரபணுவின் அடுக்கு மனிதர்களின் நோய் எதிர்ப்பு சக்தியிடம் இல்லை.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், பெண்களைக் காட்டிலும் ஆண்களிடம்தான் வைரஸின் பாதிப்பு அதிகமாகக் காணப்படுகிறது. குறிப்பாக இந்த வைரஸால் ஏ ரத்த வகை உள்ளவர்கள்தான் அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள்
இதுபோன்று ஏ வகை ரத்தம் உள்ளவர்கள் மட்டும் ஏன் அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள் என்பதற்கான காரணம் தெரியவில்லை. அதேபோல, பெண்களுக்கு இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி முறை என்பது, அவர்களைக் காக்கி்றதா அல்லது ஆண்களின் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியைக் காட்டிலும் வீரியமானதா என்பதும் தெரியவில்லை.
சீனாவில் இருந்து வந்துள்ள புள்ளிவிவரங்கள் அடிப்படையில் பார்த்தபோது, பெண்களைக் காட்டிலும் ஆண்கள்தான் அதிகமாக கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இந்த கரோனா வைரஸ் பல்வேறு கட்ட வயதை உடையவர்களிடம் எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்துகிறது, ஆண்கள், பெண்கள் உள்ளிட்டவர்களிடம் எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதற்கான ஆய்வுகளும் நடந்து வருகின்றன. இதற்கு இன்னும் அதிகமான புள்ளிவிவரங்கள் தேவை.
"ஹெர்ட் இம்யூனிட்டி தியரி"யைத்தான் இங்கிலாந்து நடைமுறைப்படுத்தியுள்ளது. இங்கிலாந்து மட்டுமல்ல சில நாடுகளும் இந்த ஹெர்ட் நோய் எதிர்ப்பு சக்தி கோட்பாட்டைத்தான் நடைமுறைப்படுத்தியுள்ளன. ஆனால், இதன் விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும்.
(ஹெர்ட் இம்யூனிட்டி தியரி என்பது மக்கள் தொகையில் 60 சதவீதம் பேர் உடல் நலத்துடன், பாதிப்பு குறைவாக ஏற்படும் உடல் நலத்தைப் பெற்றிருப்பார்கள். அவர்கள் பாதிக்கப்படட்டும் என்று நாடு விட்டுவிடும். அவர்கள் தங்களின் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி மூலம் மீண்டு வருவார்கள்.)
இந்தக் கோட்பாட்டை நாடுகள் நடைமுறைப்படுத்தும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதிகமான இறப்புகள் ஏற்பட வாய்ப்பு உண்டு, அதேசமயம், நாட்டு மக்களின் சுகாதார விஷயத்தில் பாதிப்பும், அழுத்தமும் ஏற்படலாம்.
நமது நாட்டைப் பொறுத்தவரை நாம் சரியான பாதையில் சென்று, கரோனா வைரஸைத் தடுத்து வருகிறோம். ஒருவேளை உடல் நலம் உள்ளவர்கள் தாங்களாகவே நோய் எதிர்ப்பு சக்தி மூலம் தேறி வரட்டும் என்று விட்டால், அந்த தொற்று அவரின் வயதான பெற்றோருக்குப் பரவிடும். இதுபோன்ற கொள்கையை நடைமுறைப்படுத்தும்போது எச்சரிக்கை அவசியம்.
பெரும்பாலும் இந்த கரோனா வைரஸ் வளர்ப்புப் பிராணிகள் மீது மனிதர்களுக்கோ அல்லது மனிதர்கள் மூலம் பிராணிகளுக்கோ பரவுவது கடினம், அரிதாகும்.
இந்த வைரஸ் தரை தளத்தில் அதிக நேரம் வாழக்கூடியது. கரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் பயன்படுத்திய மொபைல் போனை மற்றவர் தொடும்போதுகூட அதிகமாகப் பரவும். ஆதலால், மொபைல் போன் வைரஸ் வேகமாகப் பரவுவதற்குச் சிறந்த இடமாகும்.
ஆதலால், மொபைல் போன்களை அடிக்கடி சுத்தமாக வைத்திருப்பது அவசியமாகும். அதாவது அடுத்தவர்களிடம் கொடுக்காமல் நீங்கள் மட்டும் பயன்படுத்துங்கள்.
கர்ப்பிணிப் பெண்களுக்கு கரோனா வைரஸ் அதிகமாகப் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறதா என்பதற்காகப் புள்ளிவிவரங்கள் இல்லை. ஆனால், அவர்கள் அதிகமான கவனத்துடன் அவர்கள் இருத்தல் அவசியம். சில நேரங்களில் அவர்கள் கவனக்குறைவாக இருந்தால், அவர்களுக்குக் கருச்சிதைவு கூட ஏற்படலாம்''.
இவ்வாறு ரன்தீப் குலேரியா தெரிவித்தார்.