புதுச்சேரியில் மதுபானக் கடைகளை மூடுவது தொடர்பாக 2 நாட்களில் முடிவு செய்யப்படும் எனவும், பள்ளி, கல்லூரிகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள் நாளை முதல் வரும் 31-ம் தேதி வரை மூடப்படும் என்றும் முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தமிழகத்தில் இன்று முதல் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. இச்சூழலில் டெல்லியிலிருந்து புதுச்சேரி திரும்பிய முதல்வர் நாராயணசாமி தலைமை செயலகத்தில் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் இன்று (மார்ச் 17) கலந்தாலோசித்த பின்பு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"புதுச்சேரியில் இதுவரை யாரும் கரோனா வைரஸால் பாதிக்கப்படவில்லை. குறிப்பாக பிரான்ஸ், துபாய், மலேசியா, சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து புதுச்சேரி, காரைக்காலுக்கு வருபவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
புதுச்சேரி எல்லையில் இசிஆர், திண்டிவனம், கடலூர், விழுப்புரம் எல்லை பகுதிகளில் சோதனை செய்ய மருத்துவர்கள் குழு உள்ளனர். அவர்கள் கண்காணித்து வருகின்றனர்.
பொதுமக்கள் கூடும் இடங்களில் வைரஸ் தாக்கும் வாய்ப்பு உள்ளதால், புதுச்சேரி மாநிலத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், மால், ஜிம் உள்ளிட்டவற்றை நாளை முதல் வரும் 31-ம் தேதி வரை மூடுவதற்கு உத்தரவிட்டுள்ளோம். பொதுத்தேர்வுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுகிறது. போட்டிகள் நடத்தவும், பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் நடத்தவும் தடை செய்யப்பட்டுள்ளது.
தற்போது திருமணங்கள் நடப்பதால் அதிகளவில் உறவினர்கள், நண்பர்கள் பங்கேற்கின்றனர். வைரஸ் தாக்கும் சூழல் உள்ளதால் குறைந்த விருந்தினர்களை மட்டும் அழைக்க கோருகிறோம்.
பொது இடங்கள், பேருந்து நிலையம் ஆகியவற்றில் சோப்பு போட்டு கை கழுவ உள்ளாட்சித்துறை, நகராட்சி துறையினர் ஏற்பாடு செய்வார்கள். வாகனங்கள் கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யப்படும்.
வெண்டிலேட்டர், இன்சுலேட்டர், மாஸ்க், சாதனங்கள் வாங்க பேரிடர் துறை நிதியில் இருந்து ரூ.11 கோடி செலவிட முடிவு எடுத்துள்ளோம். தேவைப்படும் அதிக மருத்துவர்கள், செவிலியர்களை நியமித்தல் உட்பட இதர செலவுகளுக்கு ரூ.7.5 கோடி ஒதுக்கப்படும். அனைத்து துறைகளையும் ஒருங்கிணைந்து செயல்படும். கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகளுக்கு வருவோர் கைகளை சுத்தம் செய்துகொள்ள சிறப்பு ஏற்பாடு செய்ய உள்ளோம்.
தற்போது சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 50 சதவீதமாக குறைந்துள்ளது. சண்டே மார்க்கெட் மூடப்படும்.
மதுபானக் கடைகள் மூடுவது தொடர்பாக 2 நாட்களில் முடிவு செய்யப்படும்"
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தமிழகத்தில் மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில் புதுச்சேரியில் உள்ள ஏராளமான மதுபானக்கடைகள், பார்கள், மதுபான விற்பனையுடன் கூடிய உணவகங்கள், சாராயக்கடைகள் உள்ளன. அங்கு ஏராளமானோர் கூடும் சூழலில் புதுச்சேரி அரசு அதை மூட நடவடிக்கை எடுக்காமல் விலக்கு அளித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.