தமிழகத்தில் மார்ச் 31-ம் தேதி வரை அங்கன்வாடி மையங்களை மூட முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
கோவிட்-19 வைரஸ் நோய் அண்டை மாநிலங்களில் இருந்து பரவாமல் தடுக்க தமிழக அரசு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட்டுள்ளது. விமான நிலையங்களில் கண்காணிப்புப் பணிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மழலையர் பள்ளிகளுக்கும் (எல்கேஜி, யுகேஜி), தொடக்கப் பள்ளிகளுக்கும் (1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை) வரும் 31-ம் தேதி வரை விடுமுறை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் எல்லையோர மாவட்டங்களான தேனி, கன்னியாகுமரி, திருப்பூர், கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, திருநெல்வேலி, தென்காசி, திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப் பேட்டை, ஈரோடு, திண்டுக்கல், தர்மபுரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள எல்லையோர தாலுகாக்களில் உள்ள திரையரங்குகளையும் மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்களையும் வரும் 31-ம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. முதல்வர் பழனிசாமி இதனை அதிகாரபூர்வமாக நேற்று அறிவித்தார்.
இந்நிலையில் அங்கன்வாடி மையங்களுக்கு விடுமுறை குறித்து எதுவும் அறிவிக்கப்படவில்லை. தமிழகம் முழுவதும் 54 ஆயிரத்து 439 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. தமிழக அரசிடம் இருந்து விடுமுறை உத்தரவு வராததால், அங்கன்வாடி மையங்கள் வழக்கம்போல் திறக்கப்பட்டுள்ளன. எனினும் பெரும்பாலான குழந்தைகள் அங்கன்வாடிக்கு வரவில்லை.
5-ம் வகுப்பு வரை அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், அங்கன்வாடிகள் விடுமுறை குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வராததால் குழப்பம் நிலவியது. இதுகுறித்து சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதுகுறித்துப் பதிலளித்த முதல்வர் பழனிசாமி, ''ஆய்வுக் கூட்டத்தில் அங்கன்வாடிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவது குறித்து ஆலோசிக்கப்படும். பின்னர் அதுகுறித்த அறிவிப்பு வெளியாகும்'' என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் முதல்வர், துணை முதல்வர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் தற்போது தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் மார்ச் 31-ம் தேதி வரை அங்கன்வாடி மையங்களை மூட முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டார்.
மருத்துவக் கல்லூரிகள் தவிர்த்து, தமிழகத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களையும் மூட வேண்டும் என்றும் முதல்வர் உத்தரவிடார். 10-ம் வகுப்பு, பிளஸ் 2 அரசுத் தேர்வுகள் மற்றும் நுழைவுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்று அவர் தெரிவித்தார்.