பேராவூரணி அருகே கரோனா வைரஸ் தொற்று ஏற்படாமல் தடுக்கும் விதமாக, ஊர் நுழைவு வாயிலில் விழிப்புணர்வு ஃப்ளக்ஸையும், அத்துடன் கை, கால் கழுவ தண்ணீருடன் சோப்பும் வைத்துள்ள ஊராட்சி மன்றத் தலைவரைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.
சீனாவைத் தொடர்ந்து உலக அளவில் பல்வேறு நாடுகளை கரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் இதன் பாதிப்பு பரவி வரும் நிலையில், மத்திய, மாநில அரசுகள் சுகாதாரத் துறையின் மூலம் பல்வேறு விழிப்புணர்வு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
குறிப்பாக, தமிழகத்தில் கரோனா வைரஸ் எதிரொலியாக, மக்கள் அதிகம் கூடும் இடங்களில், பொதுமக்களுக்கு விழிப்புணர்வும், பரிசோதனையும் செய்யப்படுகிறது. அத்துடன் கோவிட் -19 வைரஸ் பரவாமல் இருக்க, ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறை கைகளை சோப்பு போட்டுக் கழுவ வேண்டும் என சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.
இதைப் பின்பற்றும் வகையில், தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றியம், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள செந்தலைவயல் ஊராட்சி மன்றத் தலைவர் ரகமத்துல்லா (50), ஊர் நுழைவு வாயிலில் உள்ள பேருந்து நிறுத்தத்தில், கரோனா குறித்த விழிப்புணர்வு ஃப்ளக்ஸ் ஒன்றை வைத்துள்ளார். அந்த ஃப்ளக்ஸ் கீழே தற்காலிகமாக மூன்று தண்ணீர் குழாய்கள் அமைத்து, கை கழுவ டெட்டால் கிருமி நாசினி லிக்விட் மற்றும் சோப்பையும் வைத்துள்ளார்.
இதுகுறித்து ரகமத்துல்லா கூறுகையில், "எங்கள் ஊரில் 3 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க, அரசு பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. மக்களாகிய நாமும் அவர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, எங்கள் கிராமத்துக்கு வெளியூரில் இருந்து வருபவர்கள், இங்கிருந்து வெளியூர் செல்பவர்கள் கண்டிப்பாக, சோப்பு போட்டுக் கை, கால்களைக் கழுவ வேண்டும் என விழிப்புணர்வு செய்து வருகிறேன். கிராம மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது" என்றார்.