கரோனா அச்சம் காரணமாக, தமிழக எல்லையோர மாவட்டங்களில் திமுக நிகழ்ச்சிகளை வரும் 31-ம் தேதி வரை ஒத்திவைக்க வேண்டும் என, அக்கட்சியின்தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழகத்தில் ஒருவருக்கு கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர் முழுமையாக குணமடைந்துவிட்டதாகவும், ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என்றும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் 5-ம் வகுப்பு வரை பள்ளி மாணவர்களுக்கு மார்ச் 31-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களின் எல்லைகளில் உள்ள மாவட்டங்களில் திரையரங்குகள், வணிக வளாகங்களை மூடுவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 16) வெளியிட்ட அறிவிப்பில், "தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்கள் வழியாக, கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையிலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் வகையிலும், தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, தமிழக எல்லையோர மாவட்டங்களான தேனி, கன்னியாகுமரி, திருப்பூர், கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, திருநெல்வேலி, தென்காசி, திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, ஈரோடு, திண்டுக்கல், தருமபுரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் நடைபெற உள்ள திமுக நிகழ்ச்சிகள் அனைத்தும் வரும் 31-ம் தேதி வரை ஒத்தி வைத்திட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.