பிரதிநிதித்துவப் படம். 
கரோனா வைரஸ்

கரோனா வைரஸ்: தெரிந்துகொள்ள வேண்டிய 7 அவசியமான தகவல்கள்

க.போத்திராஜ்

கரோனா வைரஸ் குடும்பத்தில் இருந்து உருவாகிய கோவிட்-19 நோய் உலகையே அச்சுறுத்தி வருகிறது. கோவிட்-19 வைரஸ் எவ்வாறு பரவுகிறது, எப்படி பரவுகிறது, என்ன அறிகுறிகள் ஆகியவை குறித்து முழுமையான தகவல்கள் தரப்பட்டுள்ளன.

கரோனா வைரஸ் என்றால் என்ன?

கரோனா வைரஸ் என்பது மனிதர்களுக்கும், விலங்களுக்கும் உடல்நலக்குறைவை ஏற்படுத்தக்கூடிய பல வைரஸ்களைக் கொண்ட மிகப்பெரிய குடும்பம். பல்வேறு கரோனா வைரஸ்கள் மனிதர்களுக்கு சுவாசம் தொடர்பான நோய்கள், சாதாரண ஜலதோஷம் முதல் பல்வேறு நோய்களை உருவாக்கக் கூடியவை. அதாவது மெர்ஸ் (MERS), சார்ஸ் (SARS) போன்ற நோய்களை உண்டாக்கும். சமீபத்தில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட கரோனா வைரஸ் குடும்பத்திலிருந்து உருவான நோய் கோவிட்-19 ஆகும்.

கோவிட்-19 என்றால் என்ன?

கோவிட் -19 என்பது சமீபத்தில் கரோனா வைரஸிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட தொற்று நோயாகும். கடந்த 2019, டிசம்பர் மாதம் சீனாவின் வூஹான் நகரில் பரவுவதற்கு முன் இந்த புதிய வைரஸ், நோய் குறித்து யாருக்கும் தெரியாது

கோவிட்-19 நோய்க்கு அறிகுறி என்ன?

கோவிட்-19 நோய்க்கு பொதுவான அறிகுறிகள் என்பது காய்ச்சல், உடல் சோர்வு, வறட்டு இருமல் போன்றவையாகும். சில நோயாளிகளுக்குத் தலைவலி, உடல் வலி, மூக்கடைப்பு, மூக்கில் நீர்வடிதல், தொண்டை கரகரப்பு, வயிற்றுப்போக்கு கூட ஏற்படலாம்.

இந்த அறிகுறிகள் அனைத்தும் வழக்கமாக லேசாகத் தொடங்கி படிப்படியாக அதிகரிக்கும். சிலர் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டிருப்பார்கள், ஆனால், அவர்களுக்கு இந்த அறிகுறிகள் இருக்காது. சிலர் உடல்நலம் பாதிக்கப்படாமல் கூட இருக்கலாம்.

பெரும்பாலும் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 80 சதவீதம் பேர் எந்தவிதமான சிறப்புச் சிகிச்சையும் தேவையின்றி உடல் நலன் தேறிவிட முடியும். அதாவது கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்ட 6 பேரில் ஒருவர் மட்டும் மிகவும் தீவிரமாகப் பாதிக்கப்படவும், மூச்சு விடுதலில் சிரமத்தையும் எதிர்கொள்ள வாய்ப்பு உண்டு.

குறிப்பாக முதியோர், பரம்பரை நோய் உள்ளவர்கள் குறிப்பாக உயர் ரத்த அழுத்தம் உள்ளோர், இதய நோயாளிகள், நீரிழிவு நோயாளிகள் ஆகியோர் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டால் தீவிரமான உடல்நலக் கோளாறை எதிர்கொள்ள நேரிடலாம். ஆதலால் காய்ச்சல், இருமல், மூச்சு விடுதலில் சிரமம் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுதல் அவசியம்.

கோவிட்-19 நோய் எவ்வாறு பரவுகிறது?

கோவிட்-19 நோய் ஒருவருக்கு இருந்தால் பாதிக்கப்பட்ட அந்த நபரிடம் இருந்து மற்றொருவருக்குப் பரவும். கோவிட் -19 நோய் இருப்பவர் தும்மும்போதும், இருமும்போதும் அதிலிருந்து தெறிக்கும் சிறிய துளிகளை மற்றொருவர் அதை சுவாசிக்கும்போது ஒரு நபரிடம் இருந்து மற்றொரு நபருக்குப் பரவும்.

கோவிட்-19 நோய் வந்தவர் தும்மும்போதும், இருமும்போதும் விழுந்த துளிகள் பட்ட பொருட்களை, இடத்தைத் தொட்டுவிட்டு, அந்த கைகளை சுத்தம் செய்யாமல் கண்கள், மூக்கு, வாய் பகுதியைத் தொடும்போது ஒருவருக்குப் பரவக்கூடும்.

கோவிட்-19 நோயாளி ஒருவர் தும்மும்போதும், இருமும்போதும் தெறிக்கும் சிறிய துளிகள் காற்றில் கலந்து அதை மற்றொருவர் சுவாசித்தாலும் அவருக்குப் பரவும். ஆதலால், கோவிட்-19 பாதிக்கப்பட்டவரிடம் இருந்து ஒருவர் ஒரு மீட்டர் இடைவெளி விட்டு இருத்தல் நலம்.

காற்றின் மூலம் கோவிட்-19 நோய் பரவுமா?

கோவிட்-19 வைரஸ் பெரும்பாலும் காற்றின் மூலம் பரவுவதைவிட, ஒரு மனிதரிடம் இருந்து நேரடியான தொடர்பு, தும்மல், இருமல் ஆகியவற்றிலிருந்து தெறிக்கும் துளிகள் மூலமே பரவுகிறது.

அறிகுறிகள் ஏதும் இல்லாமல் கோவிட்-19 தொற்று ஏற்பட வாய்ப்பு உண்டா?

கோவிட்-19 வைரஸ் பெரும்பாலும் இருமல், தும்மல் ஆகியவற்றில் இருந்து தெறிக்கும் துளிகள் மூலமே பரவுகிறது. எந்தவிதமான அறிகுறியும் இல்லாமல் கோவிட்-19 பரவுவது மிகக்குறைவு. இந்த நோயால் பாதிக்கப்பட்ட பலருக்கும் குறைந்தபட்ச அறிகுறிகளாவது இருக்கும். இது இந்த நோயின் தொடக்கநிலை அறிகுறிகளாகும்.

கோவிட்-19 வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் மலத்தின் மூலம் மற்றொருவருக்குப் பரவுமா?

கோவிட்-19 வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் மலத்தின் மூலம் மற்றொருவருக்குப் பரவுவது மிகவும் குறைவுதான். தொடக்க நில ஆய்வுகளில் கோவிட்-19 பாதிக்கப்பட்டவர்களின் மலத்தின் மூலம் சிலருக்குப் பரவியிருக்கிறது. ஆனால், இதன் மூலம் மட்டுமே பெரிதாகப் பரவுகிறது என்று கூற முடியாது. இது தொடர்பான ஆய்வுகள் நடந்து வருகின்றன.

ஆதாரம்: உலக சுகாதார நிறுவனம் (WHO)

SCROLL FOR NEXT