கர்நாடக மாநிலத்தில் இதுவரை 4 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு காப்பீடு தொகை அதிகரிக்கப்படும் என்று கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் இந்தியாவுக்குள் மெல்லப் பரவி வருகிறது. கர்நாடகாவிலிருந்து பொறியாளர் ஒருவர் அமெரிக்கா சென்றுவிட்டு திரும்பிய நிலையில் அவருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், அவரின் மனைவிக்கும், அவருடன் பணியாற்றுபவருக்கும் கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இன்று கூடுதலாக ஒருவருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் பி. ஸ்ரீராமுலு பெங்களூருவில் நிருபர்களிடம் கூறுகையில், "கர்நாடகாவில் இதுவரை 4 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த 4 பேரும், அவர்களின் குடும்பத்தாரும் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவக் கண்காணிப்பில் கொண்டுவரப்பட்டுள்ளனர்.
மக்கள் முன்னெச்சரிக்கையாக இருந்து, கரோனா பரவுவதைத் தடுக்க அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.
பெங்களூருவைச் சேர்ந்த மென்பொறியாளர் அவரின் மனைவி, உடன் பணியாற்றுபவர் என 3 பேருக்கு ராஜீவ் காந்தி இதயநோய் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கரோனா பரவுவதையடுத்து, பெங்களூருவில் 5-ம் வகுப்பு வரை அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும்வரை பெங்களூரு நகரம், கிராமப் பகுதிகள் அனைத்துக்கும் 5-வது வகுப்பு வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தொடக்கப் பள்ளிகளுக்கான தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன" எனத் தெரிவித்தார்.
இதற்கிடையே மாநில மருத்துவக் கல்வி அமைச்சர் கே.சுதாகர் பெங்களூருவில் நிருபர்களிடம் கூறுகையில், "கரோனா வைரஸுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் நலன் மிகவும் முக்கியம். அவர்களின் பாதுகாப்பு கருதி, மருத்துவர்கள், செவிலியர்களுக்குக் காப்பீடு தொகையை அதிகரிப்பது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும்" எனத் தெரிவித்தார்.