உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் ஜிப்பியேசஸ் : கோப்புப்படம் 
கரோனா வைரஸ்

வரலாற்றிலேயே கரோனா வைரஸ் மிகப் பெரிய அச்சுறுத்தல்: உலக சுகாதார அமைப்பு கருத்து

ஐஏஎன்எஸ்

வரலாற்றிலேயே கரோனா வைரஸ் உலக நாடுகளுக்கு மிகப்பெரிய தொற்று நோயாக மாறி அச்சுறுத்தல் விளைவித்து வருகிறது என்பது உண்மைதான். ஆனால், இது கட்டுப்படுத்தக்கூடியது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள வூஹான் நகரில் பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் உலகிற்கே பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. சீனாவில் இதுவரை கரோனா வைரஸுக்கு 80 ஆயிரத்துக்கும் மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 ஆயிரத்துக்கும் மேல் உயிரிழந்துள்ளனர்.

உலக அளவில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் கரோனா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் ஜிப்பியேசஸ் கரோனா வைரஸ் குறித்து ஊடகங்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

''வரலாற்றிலேயே கரோனா வைரஸ் உலக நாடுகளுக்கு மிகப்பெரிய தொற்று நோயாக மாறி அச்சுறுத்தல் விளைவித்து வருகிறது. கரோனா வைரஸ், உலகில் ஏராளமான நாடுகளுக்கும், லட்சக்கணக்கான மக்களுக்கும் வேகமாகப் பரவி பல்வேறு தொந்தரவை அளித்து வருவது உண்மைதான். இதன் அடிப்படை விஷயம் என்னவென்றால் இந்த வைரஸ் யாருக்கும் கருணை காட்டாது.

உலக நாடுகள் அனைத்தும் துரிதமாகச் செயல்பட்டு, விரைவாகத் தடுப்பு நடவடிக்கைகள் எடுத்தால், இந்த கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியும். தற்போது வரை இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலானோர் குணமடைந்து வருகின்றனர்.

உதாரணமாக, சீனாவில் இந்த வைரஸால் அதிகமான அளவில் பாதிக்கப்பட்ட நிலையில், இப்போது 70 சதவீதம் பேர் இந்த வைரஸ் தாக்கத்திலிருந்து மீண்டு வீட்டுக்குத் திரும்பிவிட்டனர்.

ஆனால், எத்தனை நாடுகள் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனவோ அந்த நாடுகள் பாதிப்புக்கு உள்ளான மக்கள் குறித்த உண்மையான தகவல்களைத் தெரிவிக்கவில்லை. கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையை எடுத்துக் கொண்டால், 93 சதவீதத்தினர் வெறும் 4 நாடுகளைச் சேர்ந்தவர்கள்தான். ஆனால் அனைத்து நாடுகளின் நோக்கம் ஒன்றுதான். இந்த வைரஸைக் கட்டுப்படுத்த வேண்டும், பரவாமல் தடுக்க வேண்டும்’’.

இவ்வாறு டெட்ரோஸ் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT