கரோனா வைரஸ்

கரோனா வைரஸ்: தமிழகத்தில் உண்மை நிலை என்ன?- அமைச்சர் விஜயபாஸ்கர் விரிவான விளக்கம் 

செய்திப்பிரிவு

தமிழகத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் விரிவாகப் பேசியுள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று அளித்த பேட்டி:

''தமிழகத்தில் கரோனா பாதிப்பு குறித்து ஒரு சில விஷயங்களை தெளிவுபடுத்தியுள்ளோம். ஏற்கெனவே கரோனா வைரஸ் குறித்து ஊடகங்களில் பல்வேறு செய்திகள் வருகின்றன. தமிழக அரசு சார்பில் அதிகாரபூர்வமாக தினமும் தகவல் கொடுக்கிறோம்.

தற்போதுள்ள காலகட்டத்தில் தினமும் காலை, மாலை பத்திரிகைகளுக்கு அதிகாரபூர்வமாக தகவல் கொடுக்கவுள்ளோம். ஆகவே தமிழக அரசின் சுகாதாரத்துறையைத் தவிர வேறு எந்தத் தகவலையும் குறிப்பாக சமூக வலைதளங்களில் வரக்கூடிய எந்தத் தகவலையும் யாரும் நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.

மஸ்கட்டில் இருந்து அந்த நபர் வந்தபோது அவரிடம் கரோனா வைரஸ் பாதிக்கு குறித்த அறிகுறி இல்லை. ஆனால் 4-ம் தேதி அவர் ஸ்டான்லி மருத்துவமனைக்கு வந்தார். உடனடியாக அவரை தனிப்பட்ட வார்டில் அனுமதித்து அவரது சோதனை மாதிரிகளை புனேவில் உள்ள சோதனை மையத்துக்கு அனுப்பினோம். அது பாசிட்டிவாக வந்தது. வந்தவுடன் ஊடகத்திற்கும் தெரிவித்துவிட்டோம்.

அந்த நபர் நலமுடன் இருக்கிறார். அவரைத் தனியாக வைத்து மருத்துவ நிபுணர்கள், செவிலியர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பாதுகாப்பாக சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர் நன்றாக இருக்கிறார். அடுத்து டெக்சாஸ் மாநிலத்திலிருந்து வந்த 15 வயது சிறுவன் குறித்து சந்தேகம் வரலாம். அவரைத் தனிப்பட்ட முறையில் தனி வார்டில் வைத்து, சோதித்து அவரது மாதிரிகளை சேகரித்து சோதனைக்கு வந்துள்ளோம். அதன் முடிவு வர 48 மணி நேரம் ஆகும். அவரும் நலமாக இருக்கிறார்.

இதுவரை 68 சாம்பிள்கள் எடுத்துள்ளோம். இந்த ஒருவருக்கு மட்டும் பாதிப்புள்ளது. 55 பேருக்கு இல்லை. 8 பேரின் மாதிரிகள் பரிசோதனையில் உள்ளன. யார் அவர்கள் என்று கேட்பீர்கள். குறிப்பிட்ட அந்த நபர் விமானத்தில் வந்துள்ளார். அவருடன் பயணம் செய்தவர்கள், மற்றும் அவரது குடும்பத்தார். மிகவும் சரியான தகவல் கொடுக்க முடியாது. ஏனென்றால் மருத்துவ நெறிமுறை ஒன்று உள்ளது. அவர் சென்ற டாக்ஸி ஓட்டுநரைக்கூட நாங்கள் இதில் கொண்டுவந்துள்ளோம் என்றால் எந்த அளவுக்கு சரியாக இருக்கிறோம் பாருங்கள்.

சீனாவில் பிரச்சினை ஏற்பட்டவுடன் தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்தோம். தமிழகத்தில் மருத்துவமனைகளில் அதற்கென தனியான வார்டுகளை அமைத்துத் தயாராகிவிட்டோம். சிறந்த கண்காணிப்பு செய்துள்ளோம்.

தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு என்று சொல்வதைவிட கரோனா பாதிப்புடன் வந்த நபரை தமிழக சுகாதாரத்துறை கண்காணித்து அவரை தனிமைப்படுத்தி அவருக்கு சிகிச்சை அளிக்கிறோம். உங்களுக்கும் பாசிட்டிவ் என்பதையும் தெரிவித்து அவரையும் கண்காணித்து வருகிறோம். அதனால் யாரும் பீதியடைய வேண்டாம்.

உங்களுக்கு இன்னொரு சந்தேகம் வரலாம். முகக் கவசம் அணிய வேண்டுமா? முகக் கவசம் கிடைக்கவில்லை. விலை அதிகமாக விற்கிறார்கள் என்றெல்லாம் கேள்விகள் இருக்கும். முகக் கவசம் அணிய வேண்டும் என்கிற நிலை தமிழகத்தில் இல்லை. ட்ரீட்மென்ட் கொடுப்பவர்கள் அதற்குரிய பாதுகாப்பு உடை, உபகரணங்களுடன் இருப்பார்கள். சுத்தப்படுத்துதல் போன்ற வேலைகள் செய்யவேண்டும்.

நோயுற்று இருக்கிறார், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளது, வயதானவர், இருமல் ஜலதோஷம் உள்ளிட்ட பிரச்சினைகளில் இருக்கிறார், கேன்சர் நோயாளி, அறுவை சிகிச்சை செய்து நோய் எதிர்ப்பு நிலை குறைவாக உள்ள நிலையில் இருக்கிறார் என்றால் அவர் முகக் கவசம் அணியலாம். சாதாரண நபர்கள் முகக் கவசம் அணிய வேண்டியதில்லை.

சமூக வலைதளங்களில் இதுபோன்று நிறைய தவறான செய்திகள் வருகின்றன. விமான நிலையம் உள்ளிட்ட தீவிரமாக கண்காணிக்கும் இடத்தில் உள்ள செவிலியர்கள், காவலர்கள் முகக் கவசம் அணிய வேண்டிய நிலையில் அணிகிறார்கள். ஆகவே அனைவரும் அணிய வேண்டும் என்கிற நிலை இல்லை. மக்கள் நல்வாழ்வுத்துறை மிக அதிகமான கண்காணிப்புடன் விழிப்புணர்வுடன் கண்காணித்து வருகிறோம்.

இதுவரை 1.72 லட்சம் பேரை நாங்கள் சோதனையிட்டுள்ளோம். பாதிப்படைந்த நாடுகளான இத்தாலி, ஈரான், ஜப்பான், சீனா, தென் கொரியா ஆகிய 5 நாடுகளிலிருந்து வரும் பயணிகளை பாதிப்பு இருக்கிறதோ இல்லையோ தனிமைப்படுத்தி கண்காணிக்கிறோம். மத்திய அமைச்சகத்திலிருந்து தினமும் ஆலோசனை அளிக்கிறார்கள். உலக சுகாதார நிறுவன வழிகாட்டுதல், முதல்வர் ஆலோசனைப்படி நடக்கிறோம்.

27 பேர் யார் என்பதை லேசாகத்தான் சொல்ல முடியும். அதை மீறிச் சொல்லக்கூடாது. மருத்துவ நெறிமுறை ஒன்று உண்டு. பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து அடுத்தவரிடம் செல்வதை 100 சதவீதம் தடுக்கும் பணியைச் செய்கிறோம்''.

இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் பேசினார்.

SCROLL FOR NEXT