பிரதிநிதித்துவப் படம். 
கரோனா வைரஸ்

கரோனா வைரஸ் அச்சம்; நீதிமன்றத்தில் அவசியமின்றி கூட வேண்டாம்: வழக்கறிஞர்களுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

பிடிஐ

கரோனா வைரஸைத் தடுக்கும் முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கும் நிலையில், அதற்கு வலுசேர்க்கும் விதமாக டெல்லி உயர் நீதிமன்றம் புதிய அறிவுறுத்தல்களை வழக்கறிஞர்களுக்குத் தெரிவித்துள்ளது.

அவசியமின்றி வழக்கறிஞர்களும், மனுதாரர்களும் நீதிமன்றத்தில் கூட வேண்டாம். கரோனா வைரஸ் பரவி வரும் சூழலில் அதைத் தவிர்க்கலாம் என்று டெல்லி உயர் நீதிமன்றம் வழக்கறிஞர்களுக்கும், மனுதாரர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது.

உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் இந்தியாவுக்குள் மெல்ல ஊடுருவத் தொடங்கியுள்ளது. இதுவரை இந்தியாவில் 43 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கண்காணிப்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

உலக நாடுகளோடு ஒப்பிடும்போது இந்தியாவில் கரோனோவின் தாக்கம் குறைவுதான் என்றாலும், இதைத் தொடக்கத்திலேயே கட்டுப்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஒவ்வொரு மாநில அரசும் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன.

உலக அளவில் கரோனா வைரஸுக்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

மத்திய அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு வலுசேர்க்கும் விதமாக டெல்லி உயர் நீதிமன்றம் சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது.

டெல்லி உயர் நீதிமன்ற பதிவாளர் ரமேஷ் சந்த் கூறியிருப்பதாவது:

''கரோனா வைரஸ் தீவிரமாகப் பரவி வருகிறது. மனிதனிலிருந்து மனிதருக்குப் பரவும் வைரஸ் என்பதாலும், மனிதர்களுக்கு சுவாச ரீதியான பிரச்சினை ஏற்படுத்துகிறது. ஒரு மனிதர் பாதுகாப்பற்ற முறையில் இருமுதல், தும்முதல், தொடுதல், கை குலுக்குதல், வைரஸ் இருக்கும் ஒரு பொருளைத் தொடுதல், பின் கைகளைச் சுத்தம் செய்யாமல் முகம், கண்கள், மூக்கு போன்ற பகுதிகளைத் தொடுவதன் மூலம் கரோனா வைரஸ் பரவுகிறது.

டெல்லி அரசின் அறிவுறுத்தலின்படி கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் மக்கள் கூட்டமாகக் கூடுவதைத் தவிர்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளது. அதன்படி, நீதிமன்றத்திலும் , வளாகத்திலும் வழக்கறிஞர்களும், மனுதாரர்களும் தேவையின்றி கூடுவதைத் தவிர்க்க வேண்டும்''.

இவ்வாறு அந்தச் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT