கரோனா வைரஸ்

இந்தியாவில் 51 இடங்களில் கரோனா வைரஸ் பரிசோதனைக் கூடம்: சென்னை, தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் தேர்வு

என்.கணேஷ்ராஜ்

உலகை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவத் தொடங்கியுள்ளது. இதனையடுத்து கரோனா வைரஸ் பாதிப்பைக் கட்டுபடுத்தும் விதமாக மத்திய மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இதில் ஒரு பகுதியாக இந்தியாவில் 51 மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கரோனா வைரஸ் பரிசோதனைக் கூடம் அமைக்க இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதில் தமிழகத்தில் சென்னை கிங்ஸ் நோய்தடுப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் மற்றும் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கரோனோ வைரஸ் (கோவிட்19) ரத்தப் பரிசோதனை கூடம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதவிர மதுரை, சேலம், திருவாரூர், விழுப்புரம், திருநெல்வேலி, கோவை, சென்னை ஆகிய 7 மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் ரத்தமாதிரிகள் சேகரிக்கும் மையங்கள் அமைக்கவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்கழகம் முடிவெடுத்துள்ளது.

இந்த 7 மையங்களில் சேகரிக்கப்படும் ரத்தமாதிரிகள் சென்னை மற்றும் தேனியில் அமைப்படும் பரிசோதனைக் கூடங்களில் சோதனை செய்யப்படும்.

இந்த பரிசோதனைக்கூடம் மற்றும் ரத்தமாதிரிகள் சேகரிக்கும் மையங்களை மிக விரைவில் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மருத்துவத்துறையினர் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT